போலி ஏடிஎம் கார்டு தயாரித்து 3 கோடி மோசடி செய்த 10 பேர் கைது: வங்கிக்கு போன் செய்து தகவல்களை திரட்டியது அம்பலம்

திருமலை: தெலங்கானாவில் போலி ஏடிஎம் கார்டு தயாரித்து ₹3 கோடி மோசடி செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், வங்கிக்கு போன் செய்து தகவல்களை திரட்டியது அம்பலமாகியுள்ளது. தெலங்கானா மாநிலம், சைபராபாத் சைபர் கிரைம் காவல்துறை ஆணையாளர் சஞ்சனார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஐதராபாத்தை சேர்ந்த வங்கி மேலாளர் ஒருவர்  தனக்கு தெரியாமலேயே தனது வங்கிக் கணக்கில்  இருந்து பணம் எடுக்கப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜண்டாரா என்னும் சாலை வசதி கூட  இல்லாத கிராமத்தை சேர்ந்த துரியோதனன் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.  `ஆபரேஷன் துரியோதனன்’’ எனும் பெயரில் துணை ஆணையாளர் ரோகிணி பிரியதர்ஷினி, உதவி ஆணையாளர்கள் னிவாஸ் மற்றும் ஷாம்பாபு தலைமையில் 20 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஜார்க்கண்டில் உள்ள  குக்கிராமத்தில் 21 நாட்கள் முகாமிட்டு கூலி ஆட்களை போன்று மாறுவேடத்தில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு துரியோதனன்,  வீரந்திரகுமார், பிரகாஷ், நிரஞ்சன், கணேஷ்குமார், கமலேஷ், ராஜேந்திரகுமார், பின்கூ, குமார்,  சஞ்சய் குமார் ஆகிய  10 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதில் வழக்கமாக வாடிக்கையாளர்களின் தகவல்களை வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவர்களிடமே கேட்டு பெற்றதை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த கும்பல்  நேரடியாக வங்கிக்கே போன் செய்து தகவல்களை திரட்டியுள்ளனர். ரெட் பஸ் போன்ற மொபைல் வாலட் உள்ள செயலிகளில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம் கார்டு சீரியல் வரிசை எண்களை ரேண்டம்  முறையில் பதிவு செய்து வந்துள்ளனர். இதையடுத்து நேரடியாக அந்த வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் செய்து ஐவிஆர்எஸ் முறையில் வாடிக்கையாளர்களின் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப  போலி டெபிட் கார்டுகளை தயார் செய்து சுமார் ₹3 கோடி வரை இந்த கும்பல் வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே பணத்தை எடுத்துள்ளனர். மேலும் தனியார் வங்கியில் வாடிக்கையாளர் சேவை  மையத்திற்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் அழைப்புகள் மட்டும் வரக்கூடிய நிலையில் 15 நாட்களில் ஒரு நாளைக்கு 45 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளது. அதுவும் வங்கிக் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பது குறித்து  கேட்டு  900 சிம்கார்டுகள் மூலமாக 3 லட்சம் அழைப்புகள் வந்ததையும் போலீசார் உறுதி செய்தனர். 15 நாட்களில் 900 சிம் கார்டுகளை பெற்று 3 லட்சம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை தெரிந்து கொள்வதற்காக நேரடியாக வங்கிக்கே போன் செய்து தகவல்களை பெற்றுள்ளனர். இதில்  பெறப்பட்ட தகவலில் 3500  வாடிக்கையாளர்கள் கணக்கின் முழு விவரங்களை திரட்டிய கொள்ளைக் கும்பல் தங்களது திட்டத்தை அரங்கேற்றி பணத்தை கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் இருந்து  செல்போன்கள், போலி ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: