ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்: 3ம் தேதி தேரோட்டம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 3ம் தேதி  நடைபெறுகிறது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாதருக்கு  ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான விழாவாக சித்திரை தேர்த் திருவிழா கருதப்படுகிறது.  இந்த ஆண்டு சித்திரை தேர்த் திருவிழா இன்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் சேர்ந்தார். அதிகாலை 3.30மணிக்கு கொடி புறப்பட்டு 4.30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறை சேர்ந்தார்.

காலை 7.15 மணி முதல் பகல் 12.30 மணி வரை கண்ணாடி அறை சேவை நடந்தது.  மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன்  புறப்பாடு அடைந்து சித்திரை வீதிகளில் வலம் வந்து, இரவு 9 மணிக்கு சந்தனு மண்டபம் சேர்கிறார். யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளி நாளை அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறை சேர்கிறார். விழாவையொட்டி தினமும் காலை மாலை நம்பெருமாள் வெள்ளி, தங்க குதிரை வாகனம், பல்லக்கு, கற்பக விருட்சம், சிம்மம், யாழி, இரட்டை பிரபை, சேஷ, ஹனுமந்த, தங்க ஹம்ச வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சித்திரை வீதிகளில்  உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி கருட சேவை நடைபெறுகிறது.

மே 1ம் தேதி 7ம் திருநாளில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் மே 3ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5.15 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து 4ம் தேதி திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும் 5ம் தேதி ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: