கல்லூரி படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்பதால் வழிப்பறி சம்பவத்தை பெற்றோரிடம் மறைத்த நாங்குநேரி மாணவி: கவரிங் வெளுத்ததால் குட்டு அம்பலமானது

நாங்குநேரி: கல்லூரி படிப்பை பெற்றோர் நிறுத்தி விடுவார்கள் என்பதால் வழிப்பறி சம்பவத்தை பெற்றோரிடம் மறைத்த நாங்குநேரி மாணவி, கவரிங் நகை வெளுத்ததால் குட்டு அம்பலமானது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்தவர் ஸ்டெல்லா(19) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவார்.

கடந்த டிசம்பர் 28ம்தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த ஸ்டெல்லா, தனது மொபட்டில் தங்கை மற்றும் தம்பியை அழைத்துக் கொண்டு மீனவன்குளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நாங்குநேரி ேடால்கேட் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சென்ற போது மற்றொரு பைக்கில் வந்த இருவர், ஸ்டெல்லாவை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3 கிராம் தங்க கம்மலை பறித்துச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.7500 ஆகும்.

இந்த சம்பவம் பெற்றோருக்கு தெரிந்தால் தன்னை வெளியில் விடமாட்டார்கள், கல்லூரிக்கு செல்லவும் அனுமதிக்கமாட்டார்கள். இதனால் படிப்பு பாதிக்கும் என்று கருதிய ஸ்டெல்லா, நடந்த சம்பவத்தை பெற்றோருக்கு தெரியாமல் மறைத்துவிட்டார். மேலும் மறுநாள் அதேமாடலில் கவரிங் கம்மல் ஒன்றை வாங்கி அணிந்து கொண்டார். 3 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் கவரிங் கம்மல் தற்போது நிறம் (கறுப்பாக) மாறியது. இதையறிந்த அவரது தாய், கம்மல் கறுத்து விட்டது குறித்து ஸ்டெல்லாவிடம் கேட்டார். முதலில் சம்பவத்தை மறைத்த அவர், அதன்பிறகு தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறினார். இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்சாம்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: