காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருப்போரை அகற்ற டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருப்போரை அகற்ற டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெற்று சீனியாரிட்டி அடிப்படையில் வீடுகளை ஒதுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் காவல் நிலைய காவலர் ரகுபதி என்பவர், இது தொடர்பாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், தனக்கு சிந்தாதிரி பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் வீடு ஒதுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவலர்களுக்கு வீடு ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும், வேண்டப்பட்டவர்களுக்கும் வீடு ஒதுக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் தரப்பு குற்றசாட்டுகளை முழுவதுமாக மறுத்தார்.

மேலும் உரிய விதிகளை பின்பற்றித்தான் வீடுகள் ஒதுக்கப்படுவதாகவும், சீனியாரிட்டி அடிப்படையில் தான் வீடுகள் ஒதுக்கப்படுவதாகவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவலர்களுக்கு குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு நடந்திருப்பது தெளிவாக தெரிகிறது என்று கூறினார். மேலும் அடுத்த 2 வாரங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்று சீனியாரிட்டி அடிப்படையில் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று டிஜிபி-க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்போது உள்ள காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக யாரெல்லாம் வசிக்கிறார்கள் என்பதை அடையாளம் காண்பதற்காக ஒரு குழுவை டிஜிபி அமைக்க வேண்டும் என்றும், அந்த குழு, சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் வெளியேற 60 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார். நோட்டீஸ் அனுப்பியும் குடியிருப்பை காலி செய்யாதவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: