ராணுவ காவல்துறையில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ள பெண் வீரர்கள் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: இந்திய ராணுவ காவல்துறையில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ள பெண் வீரர்கள் பணியிடங்களுக்கு, இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்திய கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில், இந்திய ராணுவ தலைமை தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்ற போது, ராணுவத்தின் அனைத்து முக்கிய பணிகளிலும் பெண்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர் எனக் கூறியிருந்தார்.

அந்த வகையில், ராணுவத்தில் ஒருபிரிவாக உள்ள ராணுவ காவல்துறையில் பெண் சிப்பாய்களை பணியமர்த்த வகை செய்யும் பரிந்துரைக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து இந்திய ராணுவம் சார்பில், பெண் சிப்பாய்களை ராணுவ காவல்துறையில் பணியமர்த்துவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியமுள்ள பெண்கள் www.joinindianarmy.nic.in என்ற ராணுவ இணையதளத்தின் மூலம் வருகிற ஜூன் மாதம் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் 100 பெண் வீரர்கள் ராணுவ காவல்துறையில் பொது பணி வீரர்களாக(general duty soldiers) பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விமானப்படை மற்றும் கடற்படையிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இதுதவிர காங்கோ, சோமாலியா, சீயரா லீயோன் மற்றும் ரூவாண்டா உள்ளிட்ட நாடுகளில் ஐ.நா. பணியிலும் ராணுவ போலீசார் ஈடுபடுத்த​ப்பட்டு வரும் நிலையில், அப்பணிகளில் பெண்களை சேர்க்க ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: