வாழப்பாடி அருகே 20க்கும் மேற்பட்ட விலங்குகள் ஒரே நேரத்தில் உயிரிழப்பு: இறைச்சியில் விஷம் கலந்ததாக ஒருவர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 20க்கும் மேற்பட்ட விலங்குகள் ஒரே நேரத்தில் இறந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இறைச்சியில் விஷம் வைத்ததாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரத்தில் இன்று காலை முதலே சாலையில் சுற்றித்திரிந்த 20க்கும் மேற்பட்ட நாய்கள், பன்றிகள், 15க்கும் மேற்பட்ட கோழிகள், காகங்கள் ஆகியவை மயக்கமடைந்து விழுவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ச்சியாக விலங்குகள் உயிரிழந்ததை அடுத்து, அப்பகுதி மக்கள் வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பாக அதே பகுதியை சேர்ந்த குமார் என்கிற கூலித்தொழிலாளியின் ஆட்டிக்குட்டியை மர்ம விலங்கு கடித்ததில் ஆட்டிக்குட்டி உயிரிழந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக குடித்துவிட்டு சாலையில் சுற்றித்திரிந்த குமார், இப்பகுதியில் உள்ள விலங்குகளை விஷம் வைத்து கொல்லப்போவதாக கூறி வந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலும் விஷம் கலக்கப்போவதாக மிரட்டல் விடுத்ததாக அப்பகுதி தெரிவித்துள்ளனர். மேலும், ஆட்டுக்குட்டி இறந்த விரக்தி மற்றும் கோபத்தில் இறைச்சியில் விஷம் கலந்து சாலையில் தூவியுள்ளதாகவும், சிங்கிபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு அருகாமையில் உள்ள ஒரு பாறையில் குமார் இறைச்சியை வைக்கும்போது அங்கிருந்த சிலர் அவரை பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே குமார் மீது புகார் அளித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் குமாரை கைது செய்யதுள்ள போலீசார், அவரிடமும் அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாது, அப்பகுதியில் உள்ள 3 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலும் விஷம் கலந்துள்ளதா என்பது குறித்து பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: