1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளது: ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்

சென்னை: 1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதாவிற்கு ரூ.913 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாகவும், இவற்றை யார் நிர்வகிக்க வேண்டும் என ஜெயலலிதா உயில் எழுதி வைக்காததால், உயர்நீதிமன்றம் நிர்வாகியை நியமிக்க வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை ஜெ.தீபா, தீபக் ஆகியோருக்கு கிடையாது என தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கானது நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை தனது கட்சிக்காரருக்கே இருப்பதாக கூறினார். அதிமுக உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, வருமான வரித்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2016-2017 ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவிற்கு 16.37 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கார் உள்ளிட்ட சொத்துகளும், வங்கியில் 10 கோடி ரூபாய் இருப்பு உள்ளது.

மேலும், 1990-91 முதல் 2011-12 வரை ரூ.10.12 கோடி செல்வ வரி பாக்கி இருப்பதாகவும், 2005-06 முதல் 2011-12 வரை ரூ.6.62 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம், ஜதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துகளை முடக்கம் செய்திருப்பதாக வருமான வரித்துறையின் துணை ஆணையர் ஷோபா அறிக்கை தாக்கல் செய்தார். வருமானவரித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.900 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கை வரும் ஜுன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: