சிஎஸ்கே வெற்றி ரகசியம்? ரிட்டயராகும் வரை சொல்ல மாட்டேன்...டோனி ருசிகரம்

சென்னை: சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்று நான் ஓய்வு பெறும் வரை சொல்ல மாட்டேன் என்று அந்த அணியின் கேப்டன் எம்.எஸ். டோனி கூறியுள்ளார்.ஐபிஎல் தொடரின் 12வது சீசனில், நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடி வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதுவரை 11 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிப்பதுடன், பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்த முதல் அணியாகவும் முத்திரை பதித்துள்ளது.சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடந்த போட்டியில், சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய அந்த அணிக்கு, தொடக்க வீரர் ஷேன் வாட்சன் 96 ரன் (53 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி வெற்றிக்கு உதவினார். சென்னை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அசத்தியது. வாட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஐபிஎல் கோப்பையை 3 முறை வென்றுள்ள சிஎஸ்கே 9வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதுடன், 7 முறை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கேப்டன் எம்.எஸ்.டோனி கூறியதாவது: எங்கள் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்கிறார்கள். அதை அனைவருக்கும் சொல்லிவிட்டால், ஏலத்தில் என்னை யாரும் வாங்க மாட்டார்கள்.அது தொழில் ரகசியம். ரசிகர்களின் ஆதரவு மற்றும் அணி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு முக்கிய காரணம். வீரர்களை உற்சாகமாக வைத்துக் கொள்வதில் பயிற்சியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் நான் ரிட்டயராகும் வரை சொல்ல மாட்டேன்.

இவ்வாறு டோனி நகைச்சுவையாக குறிப்பிட்டார். சென்னை அணி தனது 12வது லீக் ஆட்டத்தில் நாளை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்க உள்ளது. சிஎஸ்கே பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளதால் சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: