தலைமை நீதிபதிக்கு எதிராக சதி நடப்பதாக கூறிய புகாரின் ஆணிவேரை கண்டுபிடிப்போம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி,: ‘‘தலைமை நீதிபதிக்கு எதிராக சதி நடப்பதாக வக்கீல் கூறிய குற்றச்சாட்டின் ஆணிவேரை கண்டுபிடிப்போம்’’ என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, தலைமை நீதிபதிக்கு எதிராக மிகப்பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளதாகவும், அவர் மீது போலியான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர தனக்கு 1.5 கோடி வரை பணம் தருவதாக கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்புக் கொண்டதாகவும் வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில், ‘தலைமை நீதிபதிக்கு எதிராக சதி வலைபின்னுபவர்கள் மிகுந்த சக்தி படைத்தவர்கள். பணம் கொடுத்து வழக்கின் தீர்ப்பையே மாற்றும் வேலையை செய்து கொண்டிருப்பவர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது வக்கீல் உத்சவ் பெயின்ஸ், சிசிடிவி கேமரா பதிவு உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து நீதிபதிகளிடம் சமர்பித்தார். இதைப் பார்த்த நீதிபதிகள், ‘‘இந்த விஷயத்தில் சில கவலை தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக சிபிஐ, புலனாய்வு துறை இயக்குநர்கள், டெல்லி போலீஸ் கமிஷனருடன் ஆலோசனை நடத்த விரும்புகிறோம். இது அவர்களிடம் நாங்கள் நடத்தும் விசாரணை அல்ல. இது ஒரு ஆலோசனை கூட்டம். இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயம் எதுவும் வெளியிடப்படாது. அதற்கு அரசு தரப்பு ஏற்பாடு செய்யுமா?’’ என கேட்டனர்.

இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நீதிபதிகளின் அறையில் சிபிஐ, புலனாய்வு இயக்குநர்கள், டெல்லி கமிஷனருடன் ரகசிய ஆலோசனை கூட்டம் நேற்று பிற்பகலில் நடந்தது.  இதையடுத்து, வழக்கு மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென கே.கே.வேணுகோபால், துஷார் மேத்தா ஆகியோர் நீதிபதிகளிடம் வலியுறுத்தினர்.

இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது:

இது மிக முக்கியமான விவகாரம். வரலாற்றில் முதல் முறையாக தலைமை நீதிபதி மீதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதுவரை தலைமை நீதிபதி என்பவர் எவ்வித அச்சமுமின்றி நடவடிக்கைகள் எடுத்து வந்தார். தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு குறித்து தற்போதைய நிலையில் எந்த விசாரணையிலும் தலையிட நாங்கள் விரும்பவில்லை. அதே சமயம், தலைமை நீதிபதிக்கு எதிராக சதி நடப்பதாக வக்கீல் கூறிய குற்றச்சாட்டின் ஆணிவேரை கண்டுபிடிக்கும் வரை எங்கள் விசாரணை தொடரும். ஏனெனில் இந்த விஷயத்தில் நீதித்துறையையே சிலர் கையாளுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து செயல்பட்டால், நீதித்துறையையும், எங்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியாது. இது நீதித்துறையின் மீதான நம்பிக்கை சார்ந்த விஷயம். எனவே, தீர்ப்புகளையே ‘பிக்சிங்’ செய்யும் அந்த சக்திவாய்ந்த நபர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

 வக்கீல் பெயின்சுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவரது ஆதாரங்கள், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்படுவதற்கோ, சேதப்படுத்தப்படுவதற்கோ எந்த இடமும் தந்துவிடக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இன்னும் சில முக்கிய ஆதாரங்கள் உள்ளன

நேற்றைய விசாரணையின் முடிவில், மனுதாரர் வக்கீல் உத்சவ் பெயின்ஸ் ஆஜராகி, ‘‘இந்த வழக்கு தொடர்பாக இன்னும் சில முக்கிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றையும் இணைத்து கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். அதற்கு அனுமதி தந்த நீதிபதிகள், ‘‘அதை கைப்பட எழுதி தாக்கல் செய்யுங்கள். டைப் செய்து தர வேண்டாம். அதன் மூலம் அந்த தகவல்கள் கசிவதற்கான வாய்ப்புகள் உள்ளன’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: