கேரளாவில் வாக்குப்பதிவு அதிகரிப்பிற்கு மோடி, பினராய் விஜயன் எதிர்ப்பு அலையே காரணம்: ஏ.கே.அந்தோணி பேட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள மோடி மற்றும் பினராய் விஜயன் எதிர்ப்பு அலையே வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி கூறினார். கேரளாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில் 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இது அதிகபட்சமாகும். இந்நிலையில் கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை கிடைக்குமா என்பது குறித்து இப்போது உறுதியாக கூற முடியாது. ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மதச்சார்பற்ற, ஜனநாயக கட்சிகளின் உதவியால் என்ன விலை கொடுத்தாவது மத்தியில் ஒரு மதசார்பற்ற அரசை அமைப்போம். இந்தியாவில் எல்லா கட்சிகளுக்கும் தங்களது கருத்துக்களை பரப்புவதற்கு உரிமை உண்டு. எனவே கம்யூனிஸ்ட் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எனக்கோ காங்கிரசுக்கோ கிடையாது.

கடுமையான வேலையில்லா திண்டாட்டம் விவசாயத்துறை உட்பட அனைத்து துறைகளின் வீழ்ச்சிக்கும் உடனடி முக்கியத்துவம் வழங்கி அதற்கு தீர்வு காணும் ஒரு அரசு அமையவேண்டும். என்ன விலை கொடுத்தாவது ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தும் ஒரு அரசு அமையாமல் இருக்க காங்கிரஸ் முயற்சிக்கும். கேரளாவில் மோடி மற்றும் பினராய் எதிர்ப்பு அலைதான் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.

ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிட்டதும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்தது என்றார். திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் கூறுகையில், ‘‘கேரளாவில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது காங்கிரசுக்கு சாதகமாகவே அமையும். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெல்வது உறுதி’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: