ஜெகன்மோகன் ரெட்டியை கொல்ல முயன்று கைதானவருக்கு மாரடைப்பு: சிறை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற வழக்கில் சிறையில் இருக்கும், உணவக ஊழியருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத் செல்வதற்காக சென்றார்.

விஐபி வரவேற்பு அறையில் காத்திருந்த ஜெகனிடம் விமான நிலைய தனியார் உணவகத்தில் பணிபுரிந்த சீனிவாசராவ் என்பவர் காபி எடுத்து வருவதுபோல் வந்து ஜெகன்மோகன் ரெட்டியின் இடது கையில் கத்தியால் குத்தினார். இதில் ரத்த காயம் அடைந்த ஜெகன்மோகன் ரெட்டியை அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இதுதொடர்பாக சீனிவாசராவை போலீசார் கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்காக மாநில போலீசார் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணை குழு மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீனிவாசராவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு கைதிகளுக்கான சிறப்பு பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: