சம்பள செலவை மிச்சப்படுத்த பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டத்துக்கு ரூ.6,700 கோடி திரட்ட முடிவு: விரைவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு

புதுடெல்லி: பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் (விஆர்எஸ்) திட்டத்தை செயல்படுத்த, பத்திர வெளியீடு மூலம் ரூ.6,700 கோடி திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் நஷ்டத்தில் தள்ளாடி வருகின்றன. இவற்றில் ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதே பெரும் சுமையாக உள்ளது. இதனால் ஓய்வு வயதை நெருங்கியவர்களுக்கு  விஆர்எஸ்  அளித்தால்  சம்பள செலவு மிச்சமாகும் என அரசு கருதுகிறது.

இதற்காக விருப்ப ஓய்வு திட்டத்துக்கு பிஎஸ்என்எல்-க்கு ரூ.6,365 கோடி, டெல்லி மற்றும் மும்பை தொலைத்தொடர்பு வட்டங்களில் இயங்கும் எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு ரூ.2,120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் ஏன ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. பிஎஸ்என்எல்  கடன் சுமை ரூ.14,000 கோடி. 2017-18 நிதியாண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்த நிறுவனம் ரூ.31,287 கோடி நஷ்டத்தில் உள்ளது. இதில் தற்போது 1.76 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.

வருவாயில் 60 சதவீதம் ஊழியர் சம்பளத்துக்கே போய்விடுகிறது. எம்டிஎன்எல் நிறுவனத்தில் 22,000 ஊழியர்கள் உள்ளனர். இதில் வருவாயில் 90 சதவீதம், அதாவது, ரூ.19,000 கோடி சம்பளத்துக்கே போய்விடுகிறது என கூறப்படுகிறது. இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 75,000 பேர், எம்டிஎன்எல் நிறுவனத்தில் 16,000 பேர் ஓய்வு பெற உள்ளனர். இவர்களுக்கு விரும்ப ஓய்வு அளிப்பதன் மூலம் செலவு மிச்சமாகும்.

இதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பணப்பலன், சலுகைகள் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்கு பத்திர வெளியீடு மூலம் ரூ.6,767 கோடி திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. விஆர்ஸ் திட்டத்துக்கு தேவைப்படும் ரூ.6,365 கோடி போக, எஞ்சிய தொகை 4ஜி இணைப்பை விரிவு படுத்த பயன்படுத்தப்படும். இதுகுறித்த கருத்துக்களை கேட்டுள்ளோம். நிதி திரட்டுவதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தொலைத்தொடர்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாதி ஊழியர்கள்  சம்மதித்தாலே ரூ.1,080 கோடி மிச்சம்

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான எம்டிஎன்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே.பர்வார் சமீபத்தில் கூறுகையில், ‘‘எம்டிஎன்எல்லின் சம்பள செலவு ஆண்டுக்கு ரூ.2,500 கோடி. இதில் ரூ.1,080 கோடியை குறைக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை விரும்புகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் 19,000 ஊழியர்கள் விஆர்எஸ் பெறுவதற்கான தகுதியுடன் உள்ளனர். இவர்களில் 9,500 பேர் ஏற்றுக்கொண்டு விலகினாலே ரூ.1,080 கோடி மிச்சமாவது இது சாத்தியப்படும்’‘ என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: