ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் இ-வே பில் உருவாக்க தடை: ஜூன் 21 முதல் அமலாகிறது

புதுடெல்லி: தொடர்ந்து 2 மாதங்களுக்கு ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யாதவர்கள் இ-வே பில் உருவாக்க முடியாது. இந்த கெடுபிடி ஜூன் 21ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, வணிகர்கள் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்து வருகின்றனர். காம்பொசிஷன் திட்டம் எனப்படும் இணக்க வரி திட்டத்தில் வணிகர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. விதிகளின்படி ஒவ்வொரு மாதம் 20ம் தேதி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். காம்பொசிஷன் திட்டத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

பல்வேறு கெடுபிடிகள் இருந்தாலும், ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வது அதிகரித்து வருகிறது. போலி பில்கள் தாக்கல் செய்து இன்புட் வரி கிரெடிட் பெறுகின்றனர். இதுதொடர்பாக பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வரி ஏய்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் - டிசம்பர் மாதத்தில் 3,626 ஜிஎஸ்டி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.15,278 கோடிக்கு மோசடி நடந்துள்ளது. இதை தடுக்க புதிய நடைமுறையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், தொடர்ந்து 2 மாதங்களுக்கு ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் சரக்கு அனுப்புபவர்,  விற்பனையாளர், சரக்குகளை எடுத்துச் செல்பவர்கள், சரக்கு போக்குவரத்து ஏஜென்சி அல்லது கூரியர் சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் இ-வேபில் உருவாக்க தடை விதிக்கப்படும்.

வரும் ஜூன் 21ம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கும், மாநிலத்துக்குள்ளும் ரூ.50,000க்கு மேல் மதிப்புடைய சரக்குகளை அனுப்ப இ-வே பில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே, இவே பில் உருவாக்க தடை விதிக்கப்பட்டால் சரக்குகளை அனுப்ப முடியாத நிலை ஏற்படும். இது வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த உதவும் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: