சேப்பாக்கத்தில் பரபரப்பு ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

சென்னை: ஐபிஎல் டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் சேப்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 12வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது. ஐபிஎல் தொடரின் 44வது ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே, சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இதையடுத்து போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் விற்பனை நேற்று காலை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டிக்கெட் வாங்க அதிகாலை முதலே சென்னை மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானம் அருகே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்கிய போது, வரிசையில் நின்று கொண்டிருந்த ரசிகர்கள் தடுப்புகளை மீறி ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு டிக்கெட் வாங்க முயன்றனர். இதனால் ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு தாக்கிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்தன. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு டிக்கெட் வாங்குவதிலேயே குறியாக இருந்தனர்.

ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசலில் பெண் ரசிகர்கள் சிலர் சிக்கிக்கொண்டு காப்பாத்துங்கள்.. காப்பாத்துங்கள்..  என்று கத்தினர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சேப்பாக்கம் மைதானத்தில் பதற்றம் நிலவியது. பின்னர் கூட்டத்தை கட்டுப்படுத்திய போலீசார், ரசிகர்களை நீண்ட வரிசையில் நிற்க வைத்து  ஐபிஎல் டிக்கெட் வாங்க ஏற்பாடு செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: