×

82 வயது முன்னாள் ராணுவ வீரருக்கு இதயவால்வு மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை

சென்னை: 82 வயது முன்னாள் ராணுவ வீரருக்கு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னையைச் சேர்ந்தவர் சத்ய பாலன் (82). இவர், ராணுவத்தில் 33 வருடங்கள் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வயது முதிர்வின் காரணமாக இவரின் இதய வால்வு சுருங்கிவிட்டது. இதை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், மீண்டும் அவரது இதய வால்வு பாதிக்கப்பட்டது.

இதனால் அந்த வால்வை மாற்றிவிட்டு அதே இடத்தில் புதிய வால்வை பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், வயது முதிர்வின் காரணமாக சத்ய பாலனுக்கு புதிய வால்வு பொருத்துவது சாத்தியமில்லை என்றும் பல மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சத்ய பாலனுக்கு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை அப்போலா மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையில் அவருக்கு புதிய இதய வால்வு பொருத்தப்பட்டது.

இதுதொடர்பாக, அறுவை சிகிச்சை செய்த மூத்த இதயவியல் மருத்துவ நிபுணர் சாய் சதீஷ் கூறியதாவது: சத்ய பாலனுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக இருந்தது. அவரது காலில் இருந்து இதயத்திற்கு ரத்தத்தை திருப்பி அனுப்பும் குழாயில் கால்சியம் அதிகம் படிந்து இருந்தது. இதனால் எந்த வால்வையும் அதன் வழியாக நகர்த்த முடியவில்லை. இதற்கு முன்பு அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சை தொடர்பான எந்த தகவலும் அவரிடம் இல்லை. அவரது வயது மற்றும் ஆரோக்கியம் இரண்டும் இந்த சிகிச்சை மேற்கொள்ள சாதகமானதாக இல்லை.

இவற்றை எல்லாம் மீறி இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை வெறும் 20 நிமிடங்களில் செய்து முடிக்கப்பட்டது.  இவ்வாறு அவர் கூறினார். சத்ய பாலன் கூறுகையில், இதுபோன்ற நவீன மருத்துவ சிகிச்சைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும். எனவே மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இந்த அறுவை சிகிச்சையை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.
அறுவை சிகிச்சை முடிந்த 2வது நாள் சத்ய பாலன் இயல்பு நிலைக்கு திரும்பி மக்களவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : soldier , 82 year old, soldier, cardiovascular, transplant, Apollo, doctor, achievement
× RELATED ராணுவ வீரர் மாயம்