மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை, ஏப்.25: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்பு ஜவாஹிருல்லா கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று அண்ணா அறிவாலயத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த தேர்தலின் களநிலவரம் குறித்து பேசினோம். திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தேர்தல் பணிகளில் ஈடுபட்டு சிறப்பான பணி ஆற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டோம். தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்து மு.க.ஸ்டாலின் முதல்வராவார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பை மனித குலத்திற்கு எதிரான தாக்குதலாக கருதுகிறேன். இந்த குண்டு வெடிப்பில் உயிர் இழந்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார். இதை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் சேம.நாராயணன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சி சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மு.க.ஸ்டாலினிடம் காண்பித்தனர். அப்போது ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வரும் 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக சேம.நாராயணன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: