அவங்க வேலையையும் ‘இவங்களே’ செஞ்சுட்டாங்க...

ஒடிசாவில் தேர்தல் நடக்கிறது என்றால், மாவோ அமைப்பினர் உள்ளே நுழைந்து டார்ச்சரைக் கொடுப்பதுதான் இதுவரையில் வழக்கம். இந்தத் தேர்தலில், மாவோ அமைப்பினரை ‘உதர் ஜாவோ’ என்று அந்தப் பக்கம் விரட்டிவிட்டு, அந்த வேலையையும் அரசியல் கட்சியினரே கையில் எடுத்துக் கொண்டிருப்பதுதான் பரிதாபம்.

ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 11ம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலின்போது ஓரிரு இடங்களில் மாவோ அமைப்பினர் வேலையைக் காட்டினர். ஓட்டுப் போட போகக்கூடாது என்று ஒரு சில கிராம மக்களை மிரட்டி உட்கார வைத்தார்கள். அடுத்து ஏப்ரல் 18, 23ம் தேதிகளில் நடந்த தேர்தல்களின் போது, மாவோக்களுக்கு அந்தச் சிரமம் இருக்கவில்லை.

ஏப்ரல் 18 இரண்டாம் கட்டத் தேர்தலின்போது தாமரை காரர்கள் இறங்கி அடித்தார்கள். கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அஸ்கா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சொரதா சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவில் வெடித்தது வன்முறை. ரெந்தி கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், பாஜ வேட்பாளர் நிலமணி பிசோயி தலைமையில் வந்த தாமரைக் கும்பல் இறங்கி அடித்ததில், அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட் எல்லாம் பீஸ்... பீஸ். வேட்பாளர் நிலமணி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

ஏப்ரல் 23ம் தேதி நடந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் போதும் மேற்படி சம்பவங்கள் தடையின்றித் தொடர்ந்தன. புரி மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவின்போது ஒரு கும்பல் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மெஷினை தூள் தூளாக்கிவிட்டு, ‘வர்ட்டா...’ என்று அதிகாரிகளுக்கு வணக்கம் வைத்துவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறது. சத்யபதி சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவிலும் இதே கலாட்டா. அங்குள்ள ஒரு வாக்குச்சாவடியில் இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுக்குநூறானது.

‘‘பாஜ கட்சிக்கு இந்தப் பகுதியில் பெரிதாக செல்வாக்கு இல்லை. ஆகவே, வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்து, வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்’’ என்கிறார்கள் ஆளும் பிஜேடி கட்சியினர். ‘‘வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பிஜேடி காரர்களே செய்துவிட்டு பழியை எங்கள் மீது போடுகிறார்கள்’’ என்கிறார்கள் தாமரைஸ். வழக்கம்போல, கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் புரி கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஜோதிபிரகாஷ் தாஸ்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: