×

காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறும் தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளதால் தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக வேலூர், திருத்தணி, மதுரை ஆகிய இடங்களில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. திருச்சி 102 டிகிரி, சேலம், பாளையங்கோட்டை, கரூர் 100 டிகிரி, சென்னை 95 டிகிரி வெயில் நிலவியது. இருப்பினும் வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. இதனால் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. திருவண்ணாமலை, செங்கம் ஆகிய இடங்களில் நேற்று சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டையில் 50மிமீ, வால்பாறை 40மிமீ, தேவாலா 30 மிமீ, மதுக்கூர், வந்தவாசி 20 மிமீ,தென்காசி, சங்கரன்கோயில், தேன்கனிக்கோட்டை, மன்னார்குடி ஆகிய இடங்களில் 10மிமீ மழை பெய்தது.

இந்நிலையில், தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் நேற்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இன்று அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கடலில் மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும். சில இடங்களில் கடல் சீற்றம் காணப்படும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். 27ம் தேதி முதல் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை முதல் நாகப்பட்டினம் வரை உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவான பிறகு வட மேற்கு திசையில் நகரக்கூடும் என்பதால் நாகப்பட்டினம் சென்னை இடையே அந்த புயல் கரை கடக்கவும் வாய்ப்புள்ளது. இன்று முதல் 29ம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu , Air Conditioning, Tamil Nadu, Thunderstorms with thunder
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...