சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளருக்கு கட்சியினர் கடும் எதிர்ப்பு

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மறைவை தொடர்ந்து மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் ஆளும் கட்சியான அதிமுக மட்டும் கடும் போராட்டத்திற்கு பின் நேற்று முன்தினம் வதம்பச்சேரியை சேர்ந்த கந்தசாமி என்பவரை வேட்பாளராக அறிவித்தது. இவர் மறைந்த எம்.எல்.ஏ. கனகராஜின் சித்தப்பா மகன். கட்சி தலைமையின் அறிவிப்பு, வேட்பாளர் பந்தயத்தில் இருந்த மாதப்பூர் பாலு மற்றும் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலின் போது கனகராஜை வேட்பாளராக அறிவித்தபோதும் அதிருப்தியில் ஒன்றிய செயலாளர் மாதப்பூர் பாலு ஒரு வாரம் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

இந்த முறையும் அதுபோன்று நடந்து விடக்கூடாது என வேட்பாளர் கந்தசாமி நேற்று தனது ஆதரவாளர்களுடன் பாலு வீட்டிற்கு சென்று சால்வை அணிவித்து அவரை சமாதானம் செய்தார். இதேபோல முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை சமாதானம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, சூலூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம், கண்ணம்பாளையம், இருகூர், முத்துக்கவுண்டன்புதூர் பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர் தற்போது அறிவித்த வேட்பாளரை புறக்கணித்து தேர்தல் பணி செய்ய மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களையும் சமாதானப்படுத்த முயற்சி நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: