சீர்காழியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: அமைதி பேச்சுவார்த்தையை விவசாயிகள் புறக்கணிப்பு

சீர்காழி: சீர்காழி பகுதியில் வயல்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்தது சம்பந்தமாக நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா பழையபாளையம் கிராமத்தில் விளைநிலங்களுக்கு இடையே கடந்த 2013ம் ஆண்டு தனியார் எண்ணெய் நிறுவனம்  ஆழ்துளை கிணறு அமைத்து எரிவாயு எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக தாண்டவன் குளத்திலிருந்து மேமாத்தூர் வரை முதற்கட்டமாக 500 கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள விளைநிலங்களை கையகப்படுத்தி குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தால் விளைநிலங்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன் குழாய் பதிக்கும் பணியை தடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி டிஎஸ்பி வந்தனா, தாசில்தார் சபிதா தேவி ஆகியோர் சந்தித்து, மக்களவை தேர்தல் முடிந்ததும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்ேபரில், அவர்கள் கலைந்து சென்றனர்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட 15 விவசாயிகள் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சபிதா தேவி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சீர்காழி டிஎஸ்.பி வந்தனா மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், குழாய் பாதிப்பதால் விளைநிலங்கள்  பாதிக்கும்.  இதனால் கிராமத்திற்கு வந்து விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கருத்துக்களை கேட்டபிறகு பணிகளை துவங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து கலைந்து சென்றனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: