×

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி: நாகையில் ஏடிஜிபி ஆய்வு... பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

நாகை: இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக நாகையில் ஏடிஜிபி ஆய்வு செய்தார். அப்போது, பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இலங்கையில் கடந்த 21ம் தேதி  ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிய கிறிஸ்தவர்களை குறிவைத்து தேவாலயங்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் அடுத்தடுத்து இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில், 359 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் தமிழகத்தில் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல்துறை கூடுதல் இயக்குநர் வன்னியபெருமாள், நாகை  மாவட்டத்தில் இலங்கை ஒட்டிய கடலோர பகுதியில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும மண்டல அலுவலகம், பிரிவு அலுவலகம், கடற்கரை காவல் நிலையங்கள், கடலோர பாதுகாப்புக் குழும சோதனை சாவடிகள், கடற்கரை ரோந்து, ஏ.டி.வி. வாகன ரோந்து, நுண்ணறிவுப் பிரிவு போன்றவைகளின் செயல்பாடுகள் பற்றி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, எல்லா அதிகாரிகளும் 24 மணி நேரமும் ரோந்து பணி, நுண்ணறிவுத் தகவல்கள் சேகரித்தல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆய்வின் போது காவல்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : blasts ,The ADGP ,Naga , Sri Lanka, blast, Nagage, ADG study
× RELATED 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்