தமிழக காவல்துறைக்கு அதே லத்தி... அதே விசிலு.. இதுவாய்யா உங்க நவீனம்: கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு

சென்னை: காவல் துறையில் போலீசாருக்கு 10 ஆயிரம் லத்திகள் மற்றும் 26 ஆயிரம் விசில்கள் கொள்முதல் செய்வதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக காவல் துறை ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையானது என்று இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

காவல் துறையை நவீனப்படுத்தும் வகையிலும் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கும் வகையிலும் தற்போது உள்ள காலத்திற்கு ஏற்றபடி தொழில்நுட்ப கருவிகள் கொள்முதல் செய்வது என பல புதிய திட்டங்கள் காவல் துறை சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் பல கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் ‘நவீனம்’ என்று பெயர் மட்டுமே உள்ளது. வெளிநாடுகளில் உள்ள போலீசார் கலவரம் மற்றும் போராட்ட காலங்களில் பயன்படுத்தும் கருவிகள் எதுவும் இன்று வரை தமிழக காவல் துறையில் அறிமுகப்படுத்தவில்லை. அதற்கு பதில் 50 ஆண்டுகளாக போலீசார் பயன்படுத்தி வரும் லத்திகள் மற்றும் விசில்கள் தான் இன்று வரை போலீசார் பயன்படுத்தி வருகிறார்கள்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் போலீசாருக்கு ஒரு லத்தி ரூ. 165 என்ற  விலையில் மொத்தம் 10,326 லத்திகள் 17 லட்சத்து 3 ஆயிரத்து 790 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதேபோல், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசாருக்கு ஒரு விசில் ரூ. 50 என்ற விலையில் மொத்தம் 26,196 விசில்கள் ரூ. 13.09 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது காவல் துறையில் உள்ள போலீசார் யாரும் விசில் பயன்படுத்துவது கிடையாது. ரயில்வே போலீசார் மட்டும் விசில் பயன்படுத்தி வருகின்றனர். நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் கருவிகள் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று போலீசாரே குறை கூறி வருகின்றனர்.

போலீசார் பயன்படுத்தும் அதே தரத்திலான 3 அடி கொண்ட லத்தியின் விலை கடைகளில் ரூ. 90 முதல் ரூ. 120க்கு சதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் காவல் துறை சார்பில் ஒரு லத்தி ரூ. 165க்கு கொள்முதல் செய்யப்படுவது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

அதேபோல், கடைகளில் பித்தளையால் ஆன ஒரு விசில் ரூ. 35க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆனால் காவல் துறை சார்பில் ஒரு விசில் ரூ. 50க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு லத்திக்கு ரூ. 45 கூடுதலாகவும், விசில் ஒன்றுக்கு ரூ. 15 கூடுதலாக செலவு செய்யப்படுகிறது. இதன் மூலம் லத்தி மற்றும் விசில் மூலம் ரூ. 8 லட்சம் வரை ஊழல் நடந்திருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

கலவரம் மற்றும் போராட்டக்காலங்களில் உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் போலீசார் தன்னிச்சையாக யார் மீதும் லத்தியால் தாக்குதல் நடத்த முடியாது. அப்படி இருக்கும்போது 10 ஆயிரம் லத்திகள் ரூ. 17 லட்சம் செலவிலும், 26 ஆயிரம் விசில் ரூ. 13 லட்சத்திலும் கொள்முதல் செய்வது தேவையற்றது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு பதில் வெளிநாடுகளில் உள்ள போலீசார் பயன்படுத்தும் கருவிகளை கொள்முதல் செய்யலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: