வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா முடங்கிய விவகாரம் தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

கோவை: கோவையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்காத தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை மக்களவை தேர்தலுக்கான ஓட்டு பதிவு கடந்த 18ம் தேதி முடிந்தது. 2,045 ஓட்டு சாவடிகளில் 2,605 ஓட்டு பதிவு மெஷின் பயன்படுத்தப்பட்டது. இந்த ஓட்டு பதிவு மெஷின், கட்டுபாட்டு கருவிகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) வைக்கப்பட்டுள்ளது.

இங்கு 6 ஸ்ட்ராங்க் ரூம் மற்றும் வளாகங்களை கண்காணிக்க, 144 இடத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஸ்ட்ராங்க் ரூம் தவிர மற்ற பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவில்லை. இதுதொடர்பாக வேட்பாளர்களின் ஏஜன்ட்டுகள் தேர்தல் பிரிவில் புகார் அளித்தனர். இதைதொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி விசாரணை நடத்தினார். அதன்படி, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ‘வெப் கேமரா மற்றும் கண்காணிப்பு கேமரா’ ஒப்பந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும் கேமரா இயக்கம் முடங்கியதின் பின்னணியில் சதி  இருக்கலாம் எனவும்  கேமரா இயக்கம் இல்லாத நேரத்தில் ஸ்ட்ராங்க் ரூம் திறக்கப்பட்டு முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என்றும்  வேட்பாளர்களின் ஏஜன்டுகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழக கூடுதல் தலைமை தேர்தல் ஆணையர் பாலாஜியிடம் கேட்டபோது, ‘‘இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: