×

ஆசியப்போட்டியில் தங்கம் வென்று சாதனை விடாமுயற்சியால் சாதித்து காட்டிய கோமதி: தாய் பெருமிதம்

சென்னை: ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற திருச்சி கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது குறித்து சந்தோசத்தில் தாயார் ஆனந்த கண்ணீர் வடித்தார். தோஹாவில் நடந்துகொண்டிருக்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்தியாவுக்கான பதக்க பட்டியலை தொடங்கி வைத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து. ஏழை குடும்பத்தில் பிறந்த கோமதி மாரிமுத்துவின் சொந்த ஊர் திருச்சி அருகில் உள்ள முடிகண்டம் கிராமம். போதிய பேருந்து வசதி இல்லாத ஊர் அது. தந்தை மாரிமுத்து ஊரில் இருக்கும் விவசாயப் பண்ணையில் கூலித்தொழிலாளியாக வாழ்ந்தவர்.

தாய் ராஜாத்தி விவசாயக் கூலி வேலைக்குச் சென்று தங்களின் 4 பிள்ளைகளைக் காப்பாற்றி வந்தார். மூத்த மகன் சுப்பிரமணி ஊர்க்காவல் படையில் வேலை செய்கிறார். அடுத்து பிறந்தவர்கள் 3 பெண் குழந்தைகள். இருவருக்குத் திருமணமாகிவிட, கடைசிக் குழந்தைதான் கோமதி. படிப்பிலும் விளையாட்டிலும். பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தாராம் மாரிமுத்து.

அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரிமுத்து உடல்நலக்குறைவால் இறந்துபோக இடிந்து போயிருக்கிறார் கோமதி. ஆனாலும், விடாமுயற்சியில் விளையாட்டில் கவனம் செலுத்திவந்த கோமதி, ஆசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதித்துள்ளார்.

மகள் பதக்கம் வென்றது குறித்து தயார் ராஜாத்தி கூறியதாவது:
“கோமதி எங்க ஊர் பள்ளிக்கூடத்தில் பள்ளிப் படிப்பை முடிச்சுச்சு. அடுத்து திருச்சி ஹோலிக்கிராஸ் கல்லூரியில் சேர்த்துவிட்டோம். அது சின்ன வயசுலருந்தே நல்லா விளையாடும். காலேஜுக்குப் போக காலங்கார்த்தால 3 மணிக்கே எழுந்து தெருவுக்கு நடந்துபோய், அங்கிருந்து பஸ்ஸில் போகும். பிறகு, விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுக்கும். கணவர் உயிரோடு இருந்தவரை சின்ன புள்ளைக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். எம்புள்ளை சாதிக்கணும்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார்.

அவருக்குப் புற்று நோய் முத்தி போனதுனால அவர் எங்களைவிட்டே போய்ட்டார். அதுல புள்ள இடிஞ்சு போயிட்டா. அவளை அதுலேருந்து தேத்திக்கொண்டு வர்றதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடுச்சு. அதே மாதிரி கோமதி வளர்ந்து வர்றதுக்கு காரணமா இருந்த அவளோட பயிற்சியாளர் காந்தி சாரும் மாரடைப்பில் இறந்துட்டார். அதனால் கோமதி ரொம்ப மனசு உடைஞ்சு போச்சு. இதுக்கு நடுவுல கோமதிக்கு கால்ல காயம் வந்து விளையாடவே முடியாமல் சிரமப்பட்டுச்சு. ஆனாலும் ரொம்ப முயற்சி பண்ணி, ஜெயிச்சே ஆகணும்னு வைராக்கியமாக இருந்துச்சு.

நிச்சயமா ஜெயிப்பேன்னு அடிக்கடி என்கிட்ட சொல்லும். படிச்சு முடிச்சதும் புள்ளைக்கு எப்படியோ பெங்களூரில் வேலை கிடைச்சது. அங்கிருந்தபடியே விளையாடிக்கிட்டு இருந்துச்சு கோமதி. ஒருவாரத்துக்கும் முன்னால கோமதி, வெளிநாட்டுக்கு விளையாடப் போறேனு சொல்லுச்சு. அவ ஜெயிக்கணும்னு எல்லா சாமியையும் வேண்டிகிட்டேன்.

இன்னைக்குக் காத்தால ஒரு பொண்ணு ஓடிவந்து அக்காவ டிவியில காட்டுறாங்க. ஓட்டப் பந்தயத்துல ஜெயிச்சிருக்குன்னு சொல்லுச்சு. எனக்கு டிவி போடத் தெரியாது. அதனால கூலி வேலைக்குப் போயிட்டேன். அப்புறமா எல்லாரும் வந்து சொல்றப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.  இதுக்கு அவளோட விடாமுயற்சிக்கு பலன் கிடைச்சிருக்கு’’ என்று பெருமிதத்துடன் கூறினார் தாய் ராஜாத்தி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gomati ,championship ,Asian , Asian Cup, Gold, Adventure, Diligence, Gomti, Mother, Glory
× RELATED மாறும் மாதவிடாய் சுழற்சி…