பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை திருநங்கை - இன்ஜி. பட்டதாரி திருமணத்தை பதிவு செய்யலாம்: பதிவுத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருநங்கையை மணமுடித்த பொறியியல் பட்டதாரியின் திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமென பதிவுத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அருண்குமார், அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜாவை காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக கடந்த 31.10.2018ல் தூத்துக்குடி சங்கர ராமேஸ்வர கோயிலுக்கு சென்றனர். ஆனால், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க கோயில் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இருப்பினும் இருவரும் தாங்களாகவே கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்களது திருமணத்தை இந்து திருமணச் சட்டப்படி பதிவு செய்ய தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். இந்து மதத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும். திருநங்கையுடனான திருமணத்தை பதிவு செய்ய முடியாது என அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதை மாவட்ட பதிவாளரும் உறுதி செய்தார். எனவே, தங்களின் திருமணத்தை இந்து திருமணச் சட்டப்படி பதிவு செய்யுமாறு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: திருநங்கைகளுக்கான சட்டப்படியான உரிமைகளை மறுக்க முடியாது. திருநங்கைகள் ஆணாகவோ, பெண்ணாகவோ வாழ உரிமை உண்டு. சட்டப்படியான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. அதேநேரத்தில் இருபால் தன்மையுடன் பிறக்கும் குழந்தைகள், சிறுவர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது தவறானது. இதனால் இருபால் தன்மையுடன் பிறக்கும் குழந்தைகள், சிறுவர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரர்களின் பதிவு செய்ய மறுத்து பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. இருவரின் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், கலப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கான சலுகைகளை பெற மனுதாரர்களுக்கு தகுதியுள்ளது. இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: