கோதையாறு நீர் மின் நிலைய பாதுகாப்பு பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை: காதலியை திருமணம் செய்வது பிடிக்காமல் விபரீதம்

குலசேகரம்: குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள நடைக்காவு பாறையடி பகுதியை சேர்ந்தவர் அஜின்ராஜ் (26). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9-வது பட்டாலியன் பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு கோதையாறு நீர் மின் நிலையத்தில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு இருந்தது. இங்கு போலீசார் தங்குவதற்கான அறையும் உள்ளது. அந்த அறையில் தங்கினார். நேற்று காலை 8 மணியில் இருந்து பணியை தொடங்க வேண்டும் என்பதற்காக, 7.45 மணியளவில் சக போலீஸ்காரரிடம் இருந்து பணிக்கான துப்பாக்கியை பெற்றார்.

பின்னர் தனது அறைக்குள் துப்பாக்கியை கொண்டு சென்றார். 8 மணியளவில் அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

இதையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் சென்று பார்த்த போது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, அஜின்ராஜ் இறந்து கிடந்தார். இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கும், பேச்சிப்பாறை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். பேச்சிப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மேலும் அஜின்ராஜ் உறவினர்களும் வந்து அஜின்ராஜ் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதன்பின், உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தினர். அஜின்ராஜிக்கும், அவரது கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இரு வீட்டாரும் பேசி திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர். ஆனால், நாளடைவில் காதலர்கள் இடையே கசப்புணர்வு ஏற்பட்டு, அஜின்ராஜ் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. எனவே காதலி தரப்பில் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

அப்போது, 6 மாதங்களில் திருமணம் செய்வேன் என அஜின்ராஜ் கூறி இருந்திருக்கிறார். அதன்படி திருமணம் நடக்க வில்லை. இதனால் மனம் உடைந்த மாணவி, சில நாட்களுக்கு முன் குழித்துறை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுதொடர்பாக போலீசார், அஜின்ராஜை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் 24ம்தேதி (நேற்று) திருமணம் நடக்க செய்திருந்தனர். இதற்காக அஜின்ராஜ் விடுமுறையும் எடுத்துள்ளார்.

ஆனால் திடீரென உறவினர்களிடம் எதுவும் கூறாமல் நேற்று முன்தினம் கோதையாறுக்கு சென்று தற்கொலை செய்து இருக்கிறார். இதனால், பேச்சிப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சப் கலெக்டர் விசாரணை: பணியில் இருக்கும் போது அஜின்ராஜ் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த வேண்டும். அதன்படி பத்மநாபபுரம் சப் கலெக்டர் சரண்யாஅறி நேற்று மதியம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை  மேற்கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: