குமரி மாவட்டத்தில் 8 மாதங்களில் 10,000 வாக்காளர் நீக்கத்தை ஒப்புக்கொண்ட அதிகாரிகள்: 2016க்கு பின் 45,412 பேர் நீக்கம் பற்றி விளக்கம் இல்லை

நாகர்கோவில்: குமரி மாவட்ட வாக்காளர் பட்டியலில் கடந்த 8 மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் நீக்கப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் 45,412 வாக்காளர் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் ஏதும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குபதிவு கடந்த 18ம் தேதி நடைபெற்றது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் உள்ள வாக்காளர்களில் பலரும் வாக்குசாவடிகளுக்கு சென்றபோது அவர்களது பெயர் வாக்குசாவடியில் வைக்கப்பட்டிருந்த வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கடலோர பகுதிகளில்  உள்ள வாக்குசாவடிகளில் இந்தநிலை ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் பூத் சிலிப்புகள் கைவசம் இருந்தபோதிலும் அவர்களுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இது திட்டமிட்டு நடத்தப்பட்டதாக வாக்காளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2014 தேர்தலிலும், 2016 தேர்தலிலும் வாக்காளித்த தங்களுக்கு மீண்டும் வாக்குரிமை மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்த பணிகள் வருடம்தோறும் நடைபெறுகிறது. அவ்வாறு நடைபெறும்போது வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். ஆனால் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், கட்சியினர் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனுக்கள் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டரிடமும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிக்கை பெற்றிருந்தார். அந்த வகையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ சென்னையில் விளக்கம் அளித்தார். அதில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டபோது 14.47 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு 7671 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் மீண்டும் 18 ஆயிரத்து 791 பேர் சேர்க்கப்பட்டு 2371 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வரை 10 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் இரட்டை பதிவு, மரணம் அடைந்த காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது குறிப்பிட்ட சில பூத்களில் மட்டும் பெயர் நீக்கப்பட்டுள்ளதா? என்று விசாரணை நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் என்பது கடந்த 8 மாதத்திற்கும் முன்பும் பெருமளவில் நடைபெற்றது என்பது தேர்தல் ஆணைய புள்ளி விபரங்களின் இருந்தே தெரியவருகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி நடைபெற்ற தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 67 ஆயிரத்து 796 பேர் இருந்தனர். ஏறக்குறைய ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த ஐந்தாண்டுகளில் 25 ஆயிரத்து 713 வாக்காளர்கள் மட்டுமே ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து அதிகரித்துள்ளனர்.

மேலும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் இருந்த வாக்காளர்களைவிட 526 பேர் குறைந்துள்ளனர், நாகர்கோவிலில் 9835 பேர், குளச்சலில் 8,472, பத்மநாபபுரம் தொகுதியில் 10035 பேரும், விளவங்கோடு தொகுதியில் 3512 பேர் குறைந்துள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் அதிகபட்சமாக 13032 பேர் குறைவு ஆகும். ஆனால் இது பற்றி மாவட்ட அதிகாரிகள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலும் இது அவரது கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவில்லை. கடந்த 8 மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள் கடந்த மூன்றாண்டுகளில் அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்த வாக்காளர்களில் மொத்தம் 45 ஆயிரத்து 412 பேர் நீக்கம் செய்யப்பட்டது பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது வாக்காளர் பட்டியலில் அதிகாரிகள் செய்த குளறுபடிகளை மூடிமறைக்கும் செயல் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் என்பது கடந்த 8 மாதத்திற்கும் முன்பும் பெருமளவில் நடைபெற்றது என்பதுதேர்தல் ஆணைய புள்ளி விபரங்களின் இருந்தே தெரியவருகிறது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: