மே 19ம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் மும்முனை போட்டி: தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுமா?

சென்னை: தமிழகத்தில் மே 19ம் தேதி 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் திமுக, அதிமுக, அமமுக இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதேநேரம், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுமா, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுமா என்று எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதி, 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடந்தது. தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று, வருகிற மே 19ம் தேதி ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 4 சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற 29ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தை முடித்துவிட்டு தற்போது ஓய்வில் உள்ளனர்.

வருகிற 1ம் தேதி முதல் 4 தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதேபோன்று திமுக, அதிமுக, அமமுக கட்சிகள் சார்பில் 4 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர். ஆனால், மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதனால், 4 தொகுதியில் தற்போது மும்முனை போட்டியே ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த தேர்தல் அதிமுகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், தமிழகத்தில் நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி போன்று இந்த 4 தொகுதிக்கும் அவர்கள் தீவிர கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, ஒரு தொகுதிக்கு 11க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் 17 அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை நியமித்துள்ளனர். இன்னும் ஒரு சில தினங்களில் 4 சட்டமன்ற தொகுதி முழுவதும் அதிமுக நிர்வாகிகள் முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களை மாற்ற வேண்டும் என்றும் திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு, தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டார். வேறு எந்த அதிகாரிகளையும் மாற்ற தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. இதனால், பல மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் ஆதரவுடன் ஆளும்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, 18 சட்டமன்ற தொகுதியில் ஆளுங்கட்சியினர் அதிகளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். இதை தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. அதேபோன்று, எதிர்க்கட்சி வேட்பாளர்களை குறிவைத்துதான் வருமான வரி சோதனை, பறக்கும் படை சோதனை நடத்தப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. ஒரு அதிமுக வேட்பாளர் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களிடம், அவர்களது உறவினர்களின் வீடுகளில், அலுவலகங்களில் சோதனை நடத்தப்படவில்லை.

அப்படியே சோதனை நடத்தினாலும், அந்த பணம் தேர்தல் செலவுக்காக வைக்கப்பட்டிருந்த பணம் இல்லை என்று கூறி எப்ஐஆர் கூட போடாமல், அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதுபோன்ற நடவடிக்கையால், தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாகவே பொதுமக்கள் பகிரங்கமாக புகார் கூறினர். இந்நிலையில், அதிக எதிர்பார்ப்புடன் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதியிலாவது தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுமா அல்லது வழக்கம்போல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுமா என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த 4 தொகுதிகளில் ஆளுங்கட்சியினர் ஏராளமான பணத்தை வாக்காளர்களுக்கு வழங்க இப்போதே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுங்கட்சியினர் சார்பில் தலா ₹5 ஆயிரம் வழங்கப்படும் என்று இப்போதே செய்தி வைரலாக பரவி வருகிறது.

அதனால் தேர்தல் ஆணையம், ஏற்கனவே சென்னை ஆர்.கே.நகரில் நடந்த தேர்தல் சம்பவம் போல் நடந்துவிடாமல் விழிப்போடு இருந்து கண்காணித்தால் மட்டுமே 4 தொகுதியிலும் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பொதுமக்களின் எதிர்பார்ப்பை தேர்தல் ஆணையம் நிறைவேற்றுமா அல்லது வழக்கம்போல் எதிர்க்கட்சிகளையே குறிவைக்குமா, ஆளும் கட்சியினர் மீது கண்துடைப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுமா என்ற பல்வேறு கேள்விகளுக்கு வருகிற நாட்களில் விடை கிடைக்கும் என்றே நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சென்னை ஆர்.கே.நகரில் நடந்த தேர்தல் சம்பவம் போல் நடந்துவிடாமல் விழிப்போடு இருந்து கண்காணித்தால் மட்டுமே 4 தொகுதியிலும் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: