4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ம் தேதி முதல் 14 நாட்கள் முதல்வர் பழனிசாமி பிரச்சார சுற்றுப்பயணம்...கூட்டணி தலைவர்கள் பங்கேறக வாய்ப்பு

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தலுக்காக மே 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளார். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதி, 18 சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்ற தொகுதிக்கும்  இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில்  இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று, வருகிற மே மாதம் 19ம் தேதி, ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்  என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 4 சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற 29-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அரசியல் கட்சி தலைவர்கள்  தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தை முடித்துவிட்டு தற்போது ஓய்வில் உள்ளனர். வருகிற 1ம் தேதி முதல் 4 தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

அதேபோன்று திமுக, அதிமுக, அமமுக கட்சிகள் சார்பில் 4 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் அறிவித்துள்ளனர். சூலூர் தொகுதிக்கு  கோவை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வி.பி.கந்தசாமி,  அரவக்குறிச்சிக்கு கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்  வி.வி.செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அவனியாபுரம் பகுதி செயலாளர் முனியாண்டி, ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதிக்கு  முன்னாள் எம்எல்ஏ பெ.மோகன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி  பழனிசாமி ஆகியோர்  தெரிவித்தனர்.

ஆனால், மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் கமலஹாசன் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதனால், 4 தொகுதியில் தற்போது மும்முனை போட்டியே ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த தேர்தல் அதிமுகவுக்கு மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், தமிழகத்தில் நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி போன்று இந்த 4 தொகுதிக்கும் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, ஒரு தொகுதிக்கு  11க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் 17 அதிமுக மாவட்ட செயலாளர்கள்,  நிர்வாகிகளை நியமித்துள்ளனர். இதனால், இன்னும் ஒரு சில தினங்களில் 4 சட்டமன்ற தொகுதி முழுவதும் அதிமுக நிர்வாகிகள் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அதிக எதிர்பார்ப்புடன் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதியிலாவது தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுமா? அல்லது வழக்கம்போல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுமா? என்ற சந்தேகம்  எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த 4 தொகுதிகளில் ஆளுங்கட்சியினர் ஏராளமான பணத்தை வாக்காளர்களுக்கு வழங்க இப்போதே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். அதனால் தேர்தல்  ஆணையம், ஏற்கனவே சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தேர்தல் சம்பவம் போல் நடந்துவிடாமல் விழிப்போடு இருந்து கண்காணித்தால் மட்டுமே 4 தொகுதியிலும் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முடியும் என்ற  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பொதுமக்களின் எதிர்பார்ப்பை தேர்தல் ஆணையம் நிறைவேற்றுமா? அல்லது வழக்கம்போல் எதிர்க்கட்சிகளையே குறிவைக்குமா? ஆளுங்கட்சியினர் மீது கண்துடைப்பு நடவடிக்கைகளில்  மட்டுமே ஈடுபடுமா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு வருகிற நாட்களில் விடை கிடைக்கும் என்றே நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார சுற்றுப்பயணம் செய்ய உள்ள தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மே 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளார். சூலூர் தொகுதிக்கு கோவை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து  மே-1,14-ம் தேதிகளில் முதல்வர் பழனிசாமி  வாக்கு சேகரிக்கிறார். மேலும், அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து மே-6,11-ம் தேதிகளிலும், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து  மே-5, 13-ம் தேதிகளிலும்,  ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ பெ.மோகனை ஆதரித்து மே-7,12-ம் தேதிகளிலும் முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரிக்கவுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சார தேதிகள்  இன்னும் அறிவிக்கப்பட்டவில்லை, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: