பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தை மே 19ம் தேதி வரை வெளியிடக்கூடாது: உச்சநீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

புதுடெல்லி: பி.எம். நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தை மக்களவை தேர்தல் முடியும் மே 19ம் தேதி வரை வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி எடுக்கப்பட்டுள்ள, ‛பி.எம்., நரேந்திர மோடி’ திரைப்படத்தை, மே 19 வரை திரையிட தடை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை கடந்த 11ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த படம் வெளியிடப்படுவது, தேர்தல் நடைமுறையை பாதிக்கும், எனவே தேர்தல் முடியும் வரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறின.

இதனால் இந்த படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் கடந்த 10ம் தேதி தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனு செய்தனர். இவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, ‘‘படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. முழு  படத்தையும் பார்க்கவில்லை’’ என்றார். இதனால் பிரதமர் மோடியின் முழு படத்தை பார்த்துவிட்டு அதன்பின் தடை செய்வதா, வேண்டாமா என்பது குறித்து ஏப்.,22க்குள் விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி படத்தை பார்த்த தேர்தல் அதிகாரிகள், அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இப்படத்தில் மோடியின் வாழ்க்கை கதையை விட அதிகமாக மோடியின் புகழ் பாடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், தேர்தல் சமயத்தில் இப்படத்தை வெளியிடுவது தேர்தல் விதிகளை மீறுவதாகும். குறிப்பிட்ட கட்சியை முன்னிலைப்படுவதாக இப்படம் உள்ளதால் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடக் கூடாது. கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நாளான மே 19 வரை இப்படத்தை வெளியிட அனுமதி அளிக்கக்கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் பல காட்சிகளில் முக்கிய எதிர்க்கட்சி ஊழல் கட்சி எனவும், தாங்கள் ஏழைகளுக்கான கட்சி எனவும் காட்டப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏப்., 26ம் தேதிக்குள் இந்த அறிக்கை மற்றும் படம் தொடர்பான விஷயங்களை ஆராய்ந்து பதில் அளிக்கும்படி பட தயாரிப்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: