ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் 6 காட்டு யானைகள் தஞ்சம்

ஓசூர்: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் நேற்று அதிகாலை முதலே 6 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் அணையை சுற்றி உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கடந்த ஒருவாரமாக  7 காட்டு யானைகள் தஞ்சமடைந்து சுற்றிவருகிறது. இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து அங்குள்ள விவசாய பயிர்களை நாசப்படுத்தி வந்தன. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் பேரண்டப்பள்ளி, புக்கசாகரம், முத்தாலி ஆகிய பகுதிகளில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

தொடர்ந்து, நேற்று அதிகாலை யானைகள் வனப்பகுதிக்கு செல்லாமல், அருகில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு சென்று, அணை நீரில் 6 யானைகளும் விளையாடி வருகிறது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், யானைகள் அணையில் இருப்பதைக் கண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த 10க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், அணையை சுற்றியுள்ள நந்திமங்கலம், கெலவரப்பள்ளி, ஆவலப்பள்ளி, சித்தனப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாய நிலங்களில் வேலை செய்துவரும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர், அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்ட உள்ளதாக தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED யானைகள் நடமாட்டத்தால் பேரிஜம் ஏரி செல்ல தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்