10 அடிக்கு தேங்கி கிடக்கும் சேறு : கருப்பாநதி அணை தூர்வாரப்படுமா?

கடையநல்லூர்:  கடையநல்லூரை அடுத்த கருப்பாநதி அணையை தூர்வார வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கருப்பாநதி அணைக்கட்டு. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 72.10 அடி ஆகும். இந்த அணையின் கீழ் பெருங்கால்வாய், பாப்பான்கால்வாய், சீவலன்கால்வாய், இடைகால் கால்வாய், கிளாங்காடு கால்வாய், ஊர்மேலழகியான் கால்வாய் என 6 கால்வாய்களின் மூலம் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் கொண்டு செல்லப்பட்டு 70க்கும் மேற்பட்ட குளங்களில் நிரப்பப்படுகிறது.

கருப்பாநதி அணையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் ஊர்மேலழகியான் கால்வாய் வழியாக சாம்பவர் வடகரை அனுமன் நதியில் கலக்கிறது. இந்த அணையின் மூலம் நேரடியாக ஆயிரத்து 552.21 ஏக்கர் நிலமும், மறைமுகமாக குளத்துப்பாசனம் மூலம் 7 ஆயிரத்து 962.99 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது.  இந்நிலையில் 72 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கட்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் குறைந்தபட்ச மழை பெய்தாலே உடனடியாக நிரம்பி தண்ணீர் வீணாக ஆற்றில் கலக்கிறது. தற்போது கோடை வெயிலால் நாளுக்கு நாள் அணையின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. அணையில் தற்போது 31 அடி தண்ணீர் இருந்தாலும் 10 அடிக்கு மேல் சேறும் சகதியுமாக தான் இருக்கிறது.

எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கருப்பாநதி அணைக்கட்டை தூர்வாரி தண்ணீரை சேமித்து வைக்க அணையின் கொள்ளளவை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களாக ஊரின் நகர்புறத்தில் கோடை மழை அவ்வப்போது மாலை வேளைகளில் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் சுமார் 9 மணி அளவில் பலத்த இடி மின்னல், சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது.  காரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கன மழை பெய்தது. இதனால் தென்காசிமதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்தே சென்றன. ஆனால் கருப்பாநதி அணைக்கட்டு மலைப்பகுதிகளில் மழையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED 16ம் தேதி இரவு திருப்பதியில் 10 மணி நேரம் நடை அடைப்பு