முட்டை உற்பத்தி அதிகரிப்பு, விற்பனை சரிவு : நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நாள்தோறும் 5 கோடி இழப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி அதிகரித்து விற்பனை சரிந்துள்ளதால், பண்ணையாளர்களுக்கு நாள்தோறும் 5 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் தினமும் 4 கோடி முட்டை உற்பத்தியாகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, வெளிமாநிலங்களுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோடைக்காலம் துவங்கியது முதல் முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடுமையான வெப்பம் வீசும் கோடைகாலத்தில் மக்கள் முட்டை சாப்பிடுவதை குறைத்து கொண்டுள்ளனர். இதனால், முட்டை விற்பனை குறைந்துள்ளது. இதுவரை, எந்த ஆண்டும் இல்லாத அளவு, நடப்பாண்டு கோழிப்பண்ணைகளில் முட்டை விலை பெரும் சரிவை சந்தித்துள்ளது.

ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தற்போது 295 காசாக உள்ளது. பண்ணைகளில் ஒரு முட்டையை வியாபாரிகள் 295 காசுக்குத்தான் வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் கடைகளில் ஒரு முட்டை 4 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைச்செயலாளர் தர்மலிங்கம் கூறியதாவது: வழக்கமாக கோடை காலத்தில் முட்டை விலை குறையும். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஒரு முட்டை விலை 350 காசுக்குள் இருக்கும். ஆனால், நடப்பாண்டு பண்ணைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி குஞ்சுகள் புதியதாக விடப்பட்டு, அவை தற்போது முட்டை இடத்தொடங்கியுள்ளது. இதனால், முட்டை உற்பத்தியும் நடப்பாண்டு கோடை காலத்தில் அதிகரித்துள்ளது. 3 கோடி முட்டை உற்பத்தியாகும் நாமக்கல் மண்டலத்தில் தற்போது தினமும் 3.70 கோடி முட்டை வரை உற்பத்தியாகிறது.

உற்பத்தி அதிகம், விற்பனை குறைவு, விலை நிர்ணயத்தில் குழப்பம் போன்ற காரணங்களால் பண்ணைகளில் முட்டையின் விலை குறைந்துவிட்டது. தற்போது,ஒரு முட்டையை வியாபாரிகளுக்கு 295 காசுக்கு தான் கொடுக்கிறோம். இதுவரை முட்டையின் பண்ணைகொள்முதல் விலை என நிர்ணயம் செய்து வந்த என்இசிசி தற்போது முட்டையின் பண்ணை பரிந்துரை விலை என்ற புதிய பெயரில் 100 முட்டைக்கு விலை நிர்ணயம் செய்கிறது. இந்த விலைக்கும் பண்ணைகளில் விற்பனை செய்யப்படும் முட்டை விலைக்கும் 40 காசு வரை வித்தியாசம் இருக்கிறது. இதனால், பண்ணையாளர்களுக்கு கூடுதல் இழப்பு ஏற்படுகிறது. என்இசிசி அறிவிக்கும் விலைக்கு நாங்கள் முட்டையை விற்பனையை செய்ய தயாராக இருக்கிறோம்.

அதே விலைக்கு என்இசிசி பண்ணையாளர்களிடம் இருந்து முட்டையை வாங்கி விற்பனை செய்து தரவேண்டும். முட்டையின் உற்பத்தி செலவு முட்டைக்கு 380 காசு வரை செலவாகிறது. ஆனால், நாங்கள் ஒரு ரூபாய் குறைவாகத்தான் முட்டையை விற்பனை செய்கிறோம். முட்டையை விற்பனை செய்யாமல் நீண்ட நாட்கள் பண்ணைகளில் வைத்திருக்கவும் முடியாது என்பதால் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். குறைந்த விலைக்கு முட்டையை விற்பனை செய்தால் பண்ணையாளர்களுக்கு தினமும் 5 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு தர்மலிங்கம் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மலிவு விலை மருந்து விற்பனை கண்காணிப்பு