×

வாழை மரங்களை முறித்து நாசப்படுத்திய யானைகள் : விவசாயிகள் வேதனை

பென்னாகரம்: பென்னாகரம் அருகே, பெத்தனூர் கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள் வாழை தோட்டத்தை நாசப்படுத்தியது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அருகே பெத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் டினு(50) விவசாயி. இவர் தனது தோட்டத்தில் வாழை மரங்களை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது தோட்டத்தில் புகுந்த 2 காட்டு யானைகள், வாழை மரங்களை முறித்து சேதப்படுத்திக் கொண்டிருந்தன. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீப்பந்தங்களை காட்டியும், பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்ட முயன்றனர்.  

ஆனால் அதற்குள் 2 யானைகளும் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்களை முறித்து நாசப்படுத்தின. பின்னர் யானைகள் அங்கிருந்து அருகில் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு சென்று விட்டன. இதுகுறித்து விவசாயி டினு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்திய வாழை தோட்டத்தை பார்வையிட்டனர்.

அப்போது அப்பகுதி மக்கள், யானைகள் இதுபோன்று அடிக்கடி விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தடுக்க முள்வேலிகள் அமைத்து தர வேண்டும். மேலும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Banana trees, elephants, farmers
× RELATED சட்டமன்ற நிகழ்வு நேரலை வழக்கு ஒத்திவைப்பு