செங்குன்றம் சுங்கச்சாவடியில் ஓட்டுநருக்கும் கட்டண வசூலிப்பாளருக்கும் இடையே மோதல் : வாகன ஓட்டுநர்கள் போராட்டம்!

சென்னை : செங்குன்றம் அருகே சுங்கச்சாவடியில் வாகன ஓட்டுநருக்கும், கட்டண வசூலிப்பாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செங்குன்றம் அருகே நல்லூர் பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களுக்கு செல்பவர்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் கடந்த ஏப்., 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும். 10 கி.மீ சுற்றளவில் இருக்கக்கூடிய உள்ளூர் வாகனங்கள், 20 கி.மீ சுற்றளவில் இருக்கக்கூடிய உள்ளூர் வாகனங்கள் என இரண்டு பிரிவுகளாக 150 ரூபாய் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த சலுகையானது 2850 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 20 நாட்களாக வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஓட்டுநருக்கும் கட்டண வசூலிப்பாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வேன் ஓட்டுநர் ஒருவர் உள்ளூர் வாகனம் என்பதால் கட்டணச் சலுகை கேட்தாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சலுகை வழங்க மறுத்த சுங்கச் சாவடி ஊழியரிடம் ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வாகன ஓட்டி மற்றும் வாகன உரிமையாளரை சுங்கச்சாவடி ஊழியர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அருகில் இருந்த கிராம மக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிக்கு வந்து முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகளை அடிக்கும் உரிமையை யார் அளித்தது என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி