சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: அலைமோதிய கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் கிரிகெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஐ.பி.எல் போட்டிக்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஐபிஎல் போட்டித் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி சென்னை ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னையில் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இரு அணிகளும் 2வது முறையாக மோதுகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகள் 2வது முறையாக மோதும் ஆட்டம் என்பதால், ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் டிக்கெட்களை வாங்கி செல்கின்றனர். காலை டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் அனைவரும் கவுண்டரை நோக்கி விரைந்ததால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். போலீசாரின் இந்த நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: