‘அவங்களுக்கு’ ஏத்தமாதிரி தேர்தல செட் பண்ணிட்டாங்க: மம்தா புகார்

கனகூல்: மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த மக்களவை தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.  அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு நீண்ட நாட்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது கிடையாது. கோடையின் உச்சத்தில் மக்களவை தேர்தல் நடத்தப்படுவது நமது துரதிஷ்டம். தற்போது வெயில் அதிகமாக இருக்கிறது. கோடை வெப்பத்தோடு போராடி மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு மேற்கு வங்க அரசு மார்ச்சுக்குள் பஞ்சாயத்து தேர்தலை முடித்துவிட்டது. ஆனால் மக்களவை தேர்தல் மே வரை நடக்கிறது. மக்களவை தேர்தல் பாஜ தலைவர்களுக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பிரசாரத்திற்காக பாஜ தலைவர்கள் செல்ல வேண்டும் என்பதற்காக அதற்கேற்றவாறு தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளனர்” என்றார்.

 

இதனிடையே மேற்கு வங்கத்தில் 5 மக்களவை தொகுதிகளில் நேற்று மூன்றாவது கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. 92 சதவீத வாக்குப்பதிவு மையங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது: மால்டாஹா தக்‌ஷினில் உள்ள இங்கிலீஷ்பஜாரில் வாக்குப்பதிவு மையத்திற்குள் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் பாஜவிற்கு வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் கூறியதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் தெரிவித்துள்ளோம்.

மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் எதற்காக இதுபோன்று செய்கிறார்கள். போலீசார் வாக்குப்பதிவு மையத்திற்குள் செல்லக்கூடாது. பாஜ மத்திய பாதுகாப்பு படை வீரர்களை பயன்படுத்திக் கொள்கிறது. நீங்கள் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் இதேபோன்று தான் செய்தீர்கள். நான் அதை மறக்கவில்லை.  மேற்கு வங்கம் பாஜவிற்கு நல்ல பாடத்தை கற்பிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: