×

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஏழைகள், பழங்குடியினருக்கு பாஜ அநீதி: காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றச்சாட்டு

துங்கர்பூர்: கடந்த 5 ஆண்டுகால பாஜ ஆட்சியில் ஏழைகள், பழங்குடியினத்தவர் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு பாஜ அநீதி இழைத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.  ராஜஸ்தானில் வரும் 29ம் தேதி மற்றும் மே 6ம் தேதி என 2 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் துங்கர்பூர் தொகுதியில் உள்ள பனேஸ்வர்தாமில் உள்ள சிவன் கோயிலில் ராகுல் காந்தி நேற்று வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: கடந்த 5 ஆண்டு கால மத்திய பாஜ ஆட்சியில் பழங்குடியினருக்கு பிரதமர் மோடி அநீதி இழைத்துள்ளார். தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாத பிரதமர் 15 தொழிலதிபர்களுக்கு மட்டும் ஆட்சி நடத்தினார்.

எனவே அடுத்த 5 ஆண்டுக்கு நீதியை நிலை நாட்ட விரும்புகிறேன். வங்கிக் கணக்கில் 15 லட்சம் போடப்படும், ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், விவசாயிகள் விளைவித்த பயிர்களுக்கு சிறந்த விலை வழங்கப்படும் என உறுதியளித்த மோடி, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உங்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசால் வழிப்பறி செய்யப்பட்டதை விட அதிகமாக திருப்பி தர நடவடிக்கை எடுப்பேன். அவர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி தான் பேசுகிறார்கள். நான் ஏழைகளின் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன். மனதில் பட்டதை எல்லாம் நான் பேசுவதாக பிரதமர் மோடி என் மீது குற்றம்சாட்டுகிறார். உண்மையில் பொய் சொல்வது பிரதமர் தான். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள் தரப்படும், வங்கி கணக்கில் 15 லட்சம் தரப்படும் என கூறியது பொய்யில்லையா?. காங்கிரஸ் அதிகாரத்துக்கு வந்தால் நியாய் திட்டத்தின் மூலம் ஏழைகள் வங்கி கணக்கில் ஆண்டுக்கு 72,000 செலுத்துவேன், ஒரு ஆண்டில் 22 லட்சம் அரசு வேலை வழங்கப்படும்.

இதுவரை எந்த நாடும் செய்யாத திட்டமான, ஏழைகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நிறைவேற்றுவோம். அனில் அம்பானி போன்றவர்கள்,  வங்கிக் கணக்கில் லட்சம் கோடி அளவில் மோடி பணம் செலுத்துகிறார். அந்த கணக்கில் இருந்து எடுத்து ஏழைகள் கணக்கில் செலுத்துவேன். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் பல்வேறு இன்னல்களை நீங்கள் அனுபவித்துள்ளீர்கள். ஆனால் நாங்கள் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் பணக்காரர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, மக்களவை 3ம் கட்ட வாக்குப்பதிவையொட்டி ராகுல் வாக்காளர்களுக்கு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளார்கள். அவர்கள் நியாய் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து வருகிறார்கள்’’ என்று கூறியுள்ளார். ‘காவலாளி திருடன்’ கோஷம்: ராகுல்காந்தி நேற்று மபி.யின் சிகோராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது `காவலாளியே திருடன்’ என்ற வாசகத்தை முழங்கினார். அப்போது, இது அழகான வாசகம் என்றபடியே காவலாளியே... என பேசியபடி நிறுத்தினார். அப்போது பொதுமக்கள் கோரஷாக திருடன்’ என்றனர். தொடர்ந்து பேசிய ராகுல் `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிரான்சில் அல்ல, இந்தியாவிலேயே ரபேல் விமானங்கள் தயாரிக்கப்படும்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul , The poor, the BJP, the Congress leader Rahul
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு