பெட்ரோல், டீசல் கார்களை விட பசுமை கார்களுக்கு அதிக சலுகைகள்

மும்பை: பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களை விட, சுற்றுச்சூழல் பாதிப்பை  ஏற்படுத்தாத மின்சார கார்களுக்கு கூடுதல் கடன் சலுகைகளை அளிக்க ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.

  வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 30 சதவீத அளவுக்கு பசுமை கார்கள் என்றழைக்கப்படும் மின்சார கார்கள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. படிப்படியாக முழுமையாக பசுமை வாகனங்களை அனுமதிப்பது தான் நோக்கம்.    உலக அளவில் இதற்காக தனி நடவடிக்கைகளை பல அமைப்புகள், வங்கிகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் விப்ரோ நிறுவனமும், ஸ்டேட் வங்கியும் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி வருகின்றன. வங்கியை பொறுத்தவரை 2030ல் முழுமையாக பசுமை கார்களுக்கு தான் கடன் தருவது என்று திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு கடன் தருவதை படிப்படியாக குறைத்து விடுவது என்றும் கருதியுள்ளது.

* பசுமை கார்களுக்கு கடன் தருவதில் 0.2 சதவீதம் வரை கடன் வட்டி சலுகை அளிக்கப்படும்.

* வழக்கமாக அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கடன் தவணை காலம் நிர்ணயிக்கப்படும். ஆனால், பசுமை கார்களுக்கு எட்டாண்டாக அதிகரிக்கப்படும்.

* குறைக்கப்பட்ட வட்டி வீதம் இந்த அவகாச காலம் முழுக்க பின்பற்றப்படும்.

*ஆறு மாதங்களுக்கு எந்தவகையான விண்ணப்ப கட்டணமும், நடைமுறை கட்டணமும் கிடையாது.

இதுகுறித்து வங்கி நிர்வாக இயக்குனர் குப்தா கூறுகையில்,‘சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கிய காரணமாக கார்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்டேட் வங்கி பசுமை கார் திட்டம், பசுமை கார்கள் ஊக்குவிப்புக்கு பெரிதும் கைகொடுக்கும் என்று நம்புகிறோம். கார்பன் நச்சுக்காற்று வெளியேறுவதை வெகுவாக தடுக்க பசுமை கார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: