உறுப்புக் கல்லூரிகளில் கல்வி கட்டண உயர்வை அண்ணா பல்கலை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழக பணியாளர்களுக்கு ஊதியம் தர நிதி தேவைப்படுவதால் தான் கல்விக் கட்டணம் உயர்த்தப்படுவதாக துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.  அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்ற நிலையில் இருப்பவரிடமிருந்தோ, கல்வியாளரிடமிருந்தோ இப்படி ஒரு விளக்கம் ஒருபோதும் வந்ததில்லை, சூரப்பா கல்வியாளராக செயல்படாமல் தனியார் கல்லூரி முதலாளி போலவே செயல்படுகிறார்.தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 13 உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளோ, ஆய்வகங்களோ இல்லை.

அங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வியின் தரம் அண்ணா பல்கலைக்கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் வழங்கப்படும் கல்வியின் தரத்தில் 10 விழுக்காடு கூட இல்லை. அவ்வாறு இருக்கும் போது கட்டணத்தை உயர்த்துவது நியாயம் அல்ல. தமிழக அரசுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரிகளில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், உறுப்புக் கல்லூரிகளில் 30,000க்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கட்டணத்தையும் உயர்த்தப் போவதாக துணைவேந்தர் அறிவித்திருப்பது மிகப்பெரிய அநீதி. இது மாணவர்களை பாதிக்கும். கட்டணத்தை உயர்த்துவதில் துணைவேந்தர் துடிப்பு காட்டுவது தேவையற்றது. எனவே, கல்விக்கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: