மே 5ல் வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு வணிகர்களிடம் தேர்தல் ஆணைய சோதனை தொடர்ந்தால் போராட்டம்: விக்கிரமராஜா எச்சரிக்கை

சென்னை: வணிகர்களிடம் தேர்தல் ஆணைய சோதனை தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா எச்சரித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. அப்போது அதன், தலைவர் விக்கிரமராஜா பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 36வது மாநில மாநாடு வரும் மே 5ம் தேதி சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக, நீதியரசர் ஜோதிமணி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ராஜேந்திரன் ஐஏஎஸ், தொழிலதிபர் ஹாரூன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

மாநாட்டின் நோக்கம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் போராடி கொண்டு இருந்தாலும், மத்திய, மாநில அரசுகள் எங்களை புறந்தள்ளி வருகின்றது. ஆகவே, தேர்தல் முடிவுக்கு பின்பு மத்தியிலே ஆளக்கூடியவர்கள் யாராக இருந்தாலும். எங்களுடைய கோரிக்கை வெற்றிபெற கூடிய சூழ்நிலை உருவாக்க மாபெரும் போராட்டம் தொடரும் என்பதை மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்ற உள்ளோம். மேலும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களில் ஒன்றாக தேர்தல் ஆணையம் வியாபாரிகளிடத்தில் பறிமுதல் செய்த பணத்தை, எந்த நிபந்தனையும் இல்லாமல் திருப்பி அளிக்க வேண்டும். இதேபோல் நடைபெற உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தல் பகுதிகளில் மட்டும் சோதனைகள் தொடரவேண்டும். மற்ற இடங்களில் தொடர்ந்தால் எங்களுடைய போராட்டம் கட்டாயமாக நடைபெறும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்து கொள்கிறேன்.

தேர்தல் ஆணையத்தின் சோதனையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தினால், ஏகப்பட்ட வியாபாரிகள் கடைகளை பூட்டினால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவேதான் வர உள்ள அரசிடம் எங்களுடைய வலுவான கோரிக்கைகளை வைக்க உள்ளோம். நிறைவேற்றவில்லை என்றால், தொடர்ச்சியாக போராடுவோம், அந்த போராட்டத்தில் வெற்றிபெறுவோம் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் வர உள்ள அரசு, வணிக நல வாரியம் அமைத்திட வேண்டும். 60 வயது முதியோர் வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்த உள்ளோம்.

இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: