செக் பண்ண வந்தேனுங்க சாமீ... விவிபேட்டில் ஒளிந்திருந்த பாம்பு

கேரளாவில் நேற்று நடந்த மக்களவை தேர்தலின்போது வாக்குச்சாவடி ஒன்றில் மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் கண்ணூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்குப்பதிவு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. மய்யில் கண்டக்காய் வாக்குச்சாவடியில் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அப்போது திடீரென மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரத்திற்குள் பாம்பு ஒன்று இருப்பது வாக்காளர் ஒருவரால் தெரியவந்தது. இதனால் வாக்களிக்க வந்த மக்கள் அலறியடித்து ஓடினார்கள். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்த பாம்பு பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் அங்கு இயல்புநிலை திரும்பியதை அடுத்து மக்கள் மீண்டும் வாக்களித்தனர்.

வயநாட்டில் 2 இயந்திரம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் மிக அதிகமாக 20 பேர் களத்தில் உள்ளனர். அதே வேளையில் வாக்காளர்களின் எண்ணிக்கை வயநாட்டில் மிக குறைவு. இந்த தொகுதியில் மொத்தம் 5 லட்சத்து 94 ஆயிரத்து 177 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அதிக வேட்பாளர்கள் களத்தில் இருந்த ஆற்றிங்கல், வயநாடு, திருவனந்தபுரம் ஆகிய 3 தொகுதிகளிலும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. கேரள கவர்னர் சதாசிவம், அவரது மனைவி சரஸ்வதி சதாசிவம் ஆகியோர் திருவனந்தபுரம் ஜவகர்நகர் தொடக்க பள்ளியிலும், முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு சாவடியிலும் வாக்களித்தனர்.

கைக்கு வாக்களித்தால் தாமரைக்கு ஓட்டு பதிவு

கேரளாவின் கோவளம் அருகே சொவ்வராவில் உள்ள 181வது பூத்தில் நேற்று காலை 7.30 மணியளவில் ஒருவர் கை சின்னத்துக்கு வாக்களித்து உள்ளார். ஆனால் தாமரை சின்னத்தில் ைலட் எரிந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் உடனடியாக வாக்குச்சாவடி அதிகாரியிடம் புகார் செய்தார். அதற்குள் 76 பேர் வாக்களித்து விட்டனர். இந்த தகவல் அறிந்ததும் ஏராளமான காங்கிரசார் அந்த பூத்தில் திரண்டனர். தொடர்ந்து உடனடியாக வாக்குப்பதிவை நிறுத்துமாறு கூறினர். இதையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் புதிய இயந்திரம் கொண்டு வந்த பின் வாக்குப்பதிவு தொடங்கியது. இதுபற்றி கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறுகையில், ‘‘கடந்த 2 தினங்களாக கேரளாவில் மழை பெய்ததால் ஈரப்பதம் காரணமாக கோளாறு ஏற்பட்டிருக்கலாம்’’ என்று கூறினார்.

வாக்காளர் பெயர் மாறி வந்தது

அசாமில் காவல்துறை முன்னாள் இயக்குனர் ஜெனரல் ஹரிகிருஷ்ணா தேகா கூறுகையில், “லாசிட் நகரில் எல்பி பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் நான் வாக்களித்தேன். அதன்  பின்னர் எனக்கு அளிக்கப்பட்ட வாக்காளர் ஒப்புகை சீட்டில் நான் வாக்களித்த வேட்பாளரின் பெயருக்கு பதிலாக வேறு வேட்பாளரின் பெயர் வந்தது” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: