தேர்தலில் போட்டியிட்டால் கொல்வோம் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மராண்டிக்கு மாவோயிஸ்ட் மிரட்டல்

மக்களவை தொகுதியில் போட்டியிட்டால் என்னை கொன்றுவிடுவதாக மாவோயிஸ்ட்கள் மிரட்டியதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மராண்டி தெரிவித்தார்.  ஜார்கண்ட் மாநிலம் கோடர்மா மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா (பிரஜா தந்திரிக்) தலைவருமான பாபுலால் மராண்டி  எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று கிரிதிஹ்கில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: மாவோயிஸ்ட் அமைப்பு எனக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தேர்தலில் போட்டியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களவை தேர்தல் முடியும் வரை மாநிலத்தில் தங்கக்கூடாது எனவும் தடை செய்யப்பட்ட அந்த அமைப்பு எனக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது தனக்கு வந்த மிரட்டல் கடிதத்தின் நகலை நிருபர்களுக்கும் அவர் கொடுத்தார். இந்த மிரட்டல் தொடர்பாக கிரிதிஹ் போலீஸ் எஸ்பி சுரேந்தர் குமார் ஷா கூறுகையில், `‘மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும். மராண்டிக்கு கூடுதல் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: