×

கும்பகோணம் அடுத்த உடையாளூரில் ராஜராஜசோழனின் சமாதி உள்ளதா? தொல்லியல் துறை ஆய்வு நிறைவு: 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க முடிவு

* கிபி 11ம் நூற்றாண்டில் கும்பகோணம் அடுத்த பழையாறை வடதளி என்ற ஊர் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. இங்கிருந்துதான் ராஜராஜன் ஆட்சி செய்தார்.
* ராஜராஜசோழன் தனது வாழ்நாளின் இறுதியை உடையாளூர் பகுதியில் கழித்தபோது இறந்தார்.
* அவரது உடல் உடையாளூரிலேயே அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கும்பகோணம்: உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதி உள்ளதா என்று தொல்லியல் துறையினரின் ஆய்வு நிறைவடைந்தது. இதன் அறிக்கையை 15 நாட்களுக்கு சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த உடையாளூரில் மாமன்னன் ராஜராஜசோழனின் உடலை அடக்கம் செய்துள்ளனர். உடையாளூரில் ராஜராஜசோழனின் சமாதி இருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். சமாதி இருப்பதாக கூறப்படும் ஓட்டத்தோப்பு என்ற இடத்தில் புதையுண்டு மூன்றடி வெளியில் தெரியும் சிவலிங்கம் உள்ளது. இந்த இடத்தில் ஆண்டுதோறும் ராஜராஜசோழனின் சதய விழாவின்போது கிராம மக்கள் பூஜைகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் உடையாளூரில் ராஜராஜசோழனின் சமாதி சிதைந்து கிடக்கிறது. இங்கு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் சோழர்களின் வரலாற்று சுவடுகள் கிடைக்கும். எனவே, உடையாளூரில் மணிமண்டபம் கட்டி சுற்றுலா தலமாக அறிவிக்க உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை கடந்த 11ம் தேதி விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் விசாரித்து உடையாளூரில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் உடையாளூரில் தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். 2ம் நாளாக நேற்றும், கிரவுண்ட் பெட்டிட்ரேட்டிங் ரேடார் இயந்திரம் மூலம் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தொல்லியல்துறை துணை இயக்குனர் சிவானந்தம் கூறுகையில், கடந்த 2 நாளாக அதிநவீன இயந்திரம் மற்றும் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு பணி நேற்று மாலையுடன் முடிந்துவிட்டது. இதன் அறிக்கையை தயார் செய்து வரும் 15 நாட்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். 1970ம் ஆண்டு பழையாற்றில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வில் ராஜராஜசோழனின் தலைநகரம் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்பேரில் ஆய்வுகள் நடந்துள்ளது. இதன் முடிவில் ராஜராஜசோழன் தலைநகரம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தால் அது கோர்ட்டில் அறிக்கையில் சமர்பிக்கப்படும்’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajagopalan ,workshop ,Samadhi ,Kumbakonam , Kumbakonam, Rajarajasolan's Samadhi
× RELATED சமயபுரம், எஸ்.ஆர்.வி பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை