தூத்துக்குடியில் சொத்து தகராறில் பயங்கரம் தொழிலதிபர் சுட்டுக்கொலை: கேரளா தப்பிய அண்ணன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சொத்துத் தகராறில் தம்பியை சுட்டுக் கொன்ற அண்ணனை கேரளாவில் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி சின்னக்கடை வீதியைச் சேர்ந்தவர் ஜெகன் (43). தொழிலதிபரான இவர் தனது சகோதரர்கள் கிளவிங்டன், சுமன், சிமன்சன் ஆகியோருடன் சேர்ந்து தூத்துக்குடியில்  லாரி புக்கிங் ஆபீஸ்  நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாகவே அவரது தம்பி சிமன்சன் சொத்தில் அவரது பங்கை கேட்டு நச்சரித்து வந்துள்ளார். அதற்கு ஜெகன் மறுத்து வந்தாராம். இதுதொடர்பாக நேற்று முன்தினம் சகோதரர்கள் பேசும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் சிமன்சன் மனைவி தரன்யா மணப்பாட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாராம். பின்னர் நள்ளிரவில் ஜெகன் வீட்டு மாடியில் சகோரர்களுக்குள் மீண்டும் மோதல் வெடித்தது. இதில் ஜெகன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சிமன்சனை சுட்டதாக தெரிகிறது. இதில் குண்டு பாய்ந்த சிமன்சனை உறவினர்கள் மீட்டு  அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த டவுன் டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் போலீசார் சிமன்சன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்திய போலீசார், அங்கு வெடித்த நிலையில் ஒரு தோட்டா மற்றும் வெடிக்காத தோட்டா உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.  இதுகுறித்து சிமன்சன் மனைவி தரன்யா அளித்த புகாரின்பேரில் வடபாகம் போலீசார் ஜெகன் மீது கொலை வழக்கு மற்றும் இந்திய படைக்கல சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அவரைத் தேடி வந்தனர். நேற்று மதியம் திருவனந்தபுரம் அருகேயுள்ள கோவளத்தில் ஜெகனை கேரள போலீசார் கைது செய்து தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 சிமன்சனுக்கும், தரன்யாவுக்கும் கடந்த 2016ம் ஆண்டு செப். 25ம் தேதி திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. ஜெகன் மீது அவரது சகோதரர்கள் மிகுந்த பாசம் வைத்திருந்தனர். இதனால் அவர்கள் கைகளில் ஜெகனின் பெயரை பச்சை குத்தியுள்ளனர். இப்படி பாசமாக இருந்த சகோதரர்களிடையே திடீரென ஏற்பட்ட மோதலால் தம்பி சுட்டுக் கொலை செய்யப்பட்டது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: