வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: 29ம் தேதி புயலாக மாறும்,..வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அடுத்த சில நாளில் வலுப்பெற்று 29ம் தேதி புயலாக மாறும் என்றும், கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. சராசரியாக 100 டிகிரி வெயில் என்ற அளவில் தொடங்கி அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணி, வேலூர் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரை 102 டிகிரி, புதுச்சேரி, சேலம், திருச்சி, நாமக்கல், பாளையங்கோட்டை, கடலூர் ஆகிய இடங்களில் 97 டிகிரி வெயில் நிலவியது. சென்னையில் சராசரியாக 90 முதல் 98 டிகிரி வரை வெயில் நிலவியது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து வருவதால் தென் தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது.  தமிழகத்தில் நேற்றுவரை ஒட்டுமொத்தமாக 233 மிமீ மழை பெய்துள்ளது.  காஞ்சிபுரத்தில் நேற்று இடியுடன் கூடிய மழையுடன் சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இது தவிர, ஆத்தூர் 100மிமீ, தேனி சேலம் 60 மிமீ, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தென்காசி, சிவகிரி 40 மிமீ, தர்மபுரி, காஞ்சிபுரம் 20மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 10 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. மேலும் மழை  சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை நீடிக்கும்.

 தற்போது வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து வருகிறது. நாளை இந்த காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன் காரணமாக தென் மாவட்டங்களில் மேலும் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும். 29ம் தேதி காற்றழுத்த  தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும்.

புயலாக மாறும் பட்சத்தில் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இதன் முன்னோட்டமாக நேற்று இரவு முதல் வங்கக் கடலில் மணிக்கு 40  முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளது. கடலில் சில இடங்களில் கடல் சீற்றம் காணப்படுகிறது. வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் காற்றழுத்தம் நிலை கொண்டு இருப்பதால் அது வட மேற்கு திசையில் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக மாறும் போது சென்னை நாகப்பட்டினம் இடையே கரை கடக்கக் கூடும் என்பதால் சென்னை, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1, 2 ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களுக்கும் உரிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: