துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்காக நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்காக நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 2 நாள் சுற்றுப்பயணமாக பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் வெங்கையா நாயுடு சென்னையில் தங்கினார். நேற்று காலை ஆந்திர மாநிலம் சித்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் அவர் சென்னை திரும்புவதற்காக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு சொகுசு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று காலை திரிசூலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் வெங்கையா நாயுடு திரிசூலத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு ரயிலில் புறப்பட்டு ஆந்திர மாநிலம் தடா பகுதிக்குச் சென்றார். அதன் பின்னர் அதே ரயிலில் புறப்பட்டு நேற்று மதியம் வந்தார்.இதனால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தாம்பரத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

மேலும் எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாக சென்ற ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 1 மணி நேரத்திற்கு மேல் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.துணை ஜனாதிபதி சென்னையில் தி.நகரில் ஒரு நிகழ்ச்சி மற்றும் பல்லாவரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னையில் தங்குகிறார். பின்னர் இன்று காலை விமானத்தில் திருப்பதி புறப்பட்டு செல்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: