தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: துணை முதல்வர், அமைச்சர்கள் அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இந்த தொகுதிகளுக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உதயகுமார், என்.ஆர்.விஜயபாஸ்கர் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களை அறிவிப்பதற்கான ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடந்தது. கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்க முடியாததால் வேட்பாளர்கள் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

வேட்பாளர் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகும் கட்சி தலைமை அலுவலகத்திலேயே முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரவு வரை இருந்து, அமைச்சர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். ஆனாலும், இருவருக்குள் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்து ஏற்படாததால் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை அதிமுக வேட்பாளர்கள் பெயரை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி  பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். அதன்படி, சூலூர் தொகுதிக்கு  கோவை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வி.பி.கந்தசாமி,  அரவக்குறிச்சிக்கு கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்  வி.வி.செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அவனியாபுரம் பகுதி  செயலாளர் முனியாண்டி, ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ  பெ.மோகன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்தனர்.

 

தேர்வில் இழுபறி  குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர் உதயகுமார் ஆகியோர் தனித்தனியே தங்களது ஆதரவாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கத்துக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார். இதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடியும் இதில் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் தங்களது பிடிவாதத்தில் இருந்து இறங்கி வரவில்லை.

அதேபோன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் மறைந்த அதிமுக எம்எல்ஏ போஸ் மனைவி மற்றும் இரண்டு மகன்களும் போட்டியிட விருப்ப மனு செலுத்தியுள்ளனர். அவர்களும் சீட் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர். சூலூர் தொகுதியில் செ.மா.வேலுச்சாமிக்கு சீட் கொடுக்க கட்சி தலைமை முடிவு செய்தது. ஆனால் அமைச்சர் வேலுமணி தனது ஆதரவாளர் ஒருவருக்கு சீட் கேட்டார். அதேபோன்று சூலூர் தொகுதியில் மறைந்த எம்எல்ஏ கனகராஜ் மனைவியும் சீட் கேட்டார்.

அதனால், திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதில் ஒரு முடிவுக்கு கட்சி தலைமையால் வர முடியாமல் குழப்பம் அடைந்தனர். அதேபோன்று அரவக்குறிச்சி தொகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மார்க்கண்டேயனுக்கு சீட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

தற்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு திருப்பரங்குன்றத்துக்கு முனியாண்டி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொகுதியில் அமைச்சர் உதயகுமார் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு செல்லூர் ராஜு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று, அரவக்குறிச்சி தொகுதியில் போக்குவரத்து அமைச்சர் என்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு, தம்பிதுரையின் ஆதரவாளர் செந்தில்நாதனுக்கு வழங்கப்பட்டது.

செந்தில்நாதன் 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சூலூர் தொகுதியில் செ.மா.வேலுச்சாமிக்கு சீட் கிடைக்கும் என்று கட்சியினர் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர் கந்தசாமிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

கட்சி தலைமை வேலுமணியின் கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலையில் உள்ளதை இது காட்டுகிறது. ஓட்டப்பிடாரத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூவின் ஆதரவாளருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. மறைந்த அதிமுக எம்எல்ஏக்களான போஸ் மற்றும் கனகராஜ் குடும்பத்தினர்கள் யாருக்கும் போட்டியிட சீட் வழங்கப்படாததால் அவர்கள் ஏமாற்றத்தில் உள்ளதாக கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: