போலீஸ் உறுதி மொழியை மீறிய ரவுடிக்கு 217 நாள் சிறை: துணை கமிஷனர் அதிரடி

சென்னை: குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என போலீசாருக்கு எழுதி கொடுத்த உறுதி மொழியை மீறியதால் ரவுடிக்கு அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் 217 நாள் சிறை தண்டனை விதித்தார். ஆவடி லாசர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (எ) சண்ட சரவணன் (23), ரவுடி. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை ஆவடி போலீசார் கைது செய்து கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் ஆஜர்படுத்தினர்.

அப்போது சரவணன் ‘இன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டேன்’ என்று உறுதி மொழி பிரமாண பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், கடந்த 12ம் தேதி ஆவடி புதுநகரை சேர்ந்த சுரேஷ் (26) என்ற மெக்கானிக்கிடம் தனது பைக்கை பழுது நீக்காததை கேட்டு சரவணன் அவரை இரும்பு ராடால் அடித்துள்ளார். இதையடுத்து, மெக்கானிக் சுரேஷ் கொடுத்த புகாரின்படி போலீசார் சரவணனை கைது செய்தனர்.

இதையடுத்து, சரவணன் உறுதிமொழி பிரமாணத்தை மீறியதாக புழல் சிறையில் இருந்து, உதவி கமிஷனர் ஜான் சுந்தர் உத்தரவின் பேரில் ஆவடி போலீசார் காவலில் எடுத்து மீண்டும் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் ஆஜர்படுத்தினர். அதையடுத்து அவர் சரவணனை 217 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். எனவே, போலீசார் அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: