மக்களவை 3வது கட்ட தேர்தல் பல இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு

புதுடெல்லி: மக்களவை  தேர்தலில் மூன்றாவது கட்டமாக 116 தொகுதிகளில் நேற்று 65 சதவீத வாக்குப்பதிவு  நடந்தது. மக்களவை தேர்தல் முதல் கட்ட  தேர்தல் கடந்த 11ம் தேதியும், இரண்டாவது கட்ட தேர்தல் 18ம் தேதியும் நடந்து  முடிந்தது. மூன்றாவது கட்டமாக 14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு  நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மக்களவை தேர்தலில், அதிகளவிலான  தொகுதிகளுக்கு நடக்கும் முக்கியமான தேர்தல் இதுவாகும். மொத்தம் 18.56 கோடி  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

குஜராத்தில் மொத்தமுள்ள  26 தொகுதிகளுக்கும் கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு நடந்தது. இதைத்தவிர, அசாம் 4, பீகார் 5, சட்டீஸ்கர் 7,  கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா 14, ஒடிசா 6, உத்தரப் பிரதேசத்தில் 10,  மேற்கு வங்கத்தில் 5, கோவா 2, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும்  டையூ மற்றும் திரிபுராவில் ஒரு தொகுதியிலும் நேற்று வாக்குப்பதிவு  நடைபெற்றது. மூன்று கட்டமாக தேர்தல் நடக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீரின்  அனந்த்நாக் தொகுதியிலும் நேற்று தேர்தல் நடந்தது.

கொளுத்தும்  வெயிலையும் பொருட்படுத்தாது வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் நீண்ட  வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். ஜம்முவின் அனந்த்நாக் தொகுதியில்  5.30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். எனினும் முதல் நான்கு மணி நேரத்தில்  இங்கு 5 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவானது. காலை 11 மணி வரை  4.79 சதவீதம் பேர் தான் வாக்களித்திருந்தனர். பிற்பகல் வரை அமைதியான  முறையில் இங்கு வாக்குப்பதிவு நடந்தது.  கேரளாவில் உள்ள  வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பெண்கள், மூத்த  குடிமக்கள் என ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த  தேர்தலில் ராகுல்காந்தி, சசிதரூர், மத்திய அமைச்சர் அல்போன்ஸ்  உள்ளிட்ட  முக்கிய பிரமுகர்கள் வேட்பாளர்களாக உள்ளனர். இங்கு காலை 11 மணி வரை 22.24  சதவீத வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக கண்ணூரில் 24.53 சதவீத வாக்குகளும்,  குறைந்த பட்சமாக பொன்னானி தொகுதியில் 19.45 சதவீத வாக்குகளும் பதிவானது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் காலை 11  மணி வரை 23.68 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. பல்வேறு இடங்களில் உள்ள  வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப  கோளாறு ஏற்பட்டது. அவை சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு  தொடங்கியது. கேரளாவில் அதிகபட்சமாக 76 சதவீத வாக்குகள் பதிவானது. கர்நாடகாவில் 14 மக்களவை தொகுதிகளில் காலை 11 மணி வரை  20.65 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர்.

ஷிமோகாவில் அதிகபட்சமாக 24.58  சதவீதம், குறைந்தபட்சமாக பிதாரில் 17.95 சதவீத வாக்குகளும் பதிவாகி  இருந்தது.  இங்கும் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது  ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல இயந்திரங்கள் மாற்றப்பட்டு வேறு  இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. சட்டீஸ்கரில் 11 மணி  நிலவரப்படி 30 சதவீதம், மகாராஷ்டிராவில் 21.38 சதவீதம், அசாமில் 28.64  சதவீதம், பீகாரில் 26 சதவீதம் வாக்குகள் பதிவானது. உத்தரப்பிரதேசத்தில்  பிற்பகல் 1 மணி வரை 35.49 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.

10 பேர் பலி: கேரளாவில் நேற்று நடந்த வாக்குப்பதிவின் போது 10 பேர் பரிதாபமாக இறந்தனர். ஆலப்புழா மாவேலிக்கரை, தளிப்பறம்பு, கால்லம் கிளிகொல்லூர், வயநாடு பனமரம், கண்ணூர் கூத்துப்பரம்பு, பத்தனம்திட்டா அருகேயுள்ள ராந்நி பகுதிகளைச் சேர்ந்த 10 முதியவர்கள் வாக்குப்பதிவுக்காக வந்தபோது திடீரென மயங்கி விழுந்தனர். ஒரு சிலர் வாக்கைப்பதிவு செய்தபின்னர் வீட்டுக்கு செல்லும் வழியில் இறந்தனர்.

வேட்பாளர் பெயர் மாறியது

அசாமில் காவல்துறை முன்னாள் இயக்குனர் ஜெனரல் ஹரிகிருஷ்ணா தேகா கூறுகையில்,  “லாசிட் நகரில் எல்பி பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் நான் வாக்களித்தேன். அதன்  பின்னர் விவிபேட் கருவியில் பார்த்தபோது நான்  வாக்களித்த வேட்பாளரின் பெயருக்கு பதிலாக வேறு வேட்பாளரின் பெயரும் சின்னமும் வந்தது”  என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: